செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா சிகிச்சைக்கு அதிகம் தேவைப்படுவதால் ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாடு

Published On 2020-09-13 10:01 GMT   |   Update On 2020-09-13 10:01 GMT
கொரோனா சிகிச்சைக்கு அதிகம் தேவைப்படுவதால் ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் நாடு முழுவதும் பல மாநிலங்களில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி:

ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டால் செயற்கையாக ஆக்சிஜன் செலுத்தப்படும். இதற்காக ஆக்சிஜன் சிலிண்டர்கள் எப்போதும் தயாராக வைக்கப்பட்டு இருக்கும்.

இதேபோல் கேஸ் வெல்டிங் உள்ளிட்ட மற்ற பணிகளுக்காக தொழிற்சாலைகளிலும் ஆக்சிஜன் பயன்படுத்துவது வழக்கம்.

தற்போது பரவி உள்ள கொரோனா நோய் பலருக்கு மூச்சு திணறலை ஏற்படுத்துகிறது. அவர்களுக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது.

இப்போது ஒவ்வொரு நாளும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோரை நோய் தொற்றுகிறது. அவர்களில் சிலருக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது.

ஆனால், அந்த அளவுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் கிடைக்கவில்லை. ஆஸ்பத்திரி தேவை மற்றும் தொழிற்சாலை தேவை என்று குறிப்பிட்ட அளவுக்கு மட்டும் ஆக்சிஜன் உற்பத்தி செய்து வந்தனர்.

இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் குறிப்பிட்ட தொழிற்சாலைகள் மட்டுமே இயங்கி வருகின்றன.

அவர்கள் உற்பத்தியை அதிகரித்து இருந்தாலும் கூட கொரோனா நோயாளிகளுக்கு மிக அதிக அளவில் ஆக்சிஜன் தேவைப்படுவதால் உற்பத்தி செய்யும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் போதவில்லை.

இதனால் ஆஸ்பத்திரிகளில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. நாடு முழுவதும் பல மாநிலங்களில் இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மும்பையில் உள்ள பிரபல ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாததால் சமீபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

அதேபோல் நியூ மும்பை, நாசிக், துலே ஆகிய இடங்களிலும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கிடைக்காததால் உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளன.

எனவே, மராட்டியத்தில் உற்பத்தி செய்யும் ஆக்சிஜனில் 80 சதவீதத்தை ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்ப வேண்டும் என்று மராட்டிய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன் பக்கத்து மாநிலமான மத்திய பிரதேசத்துக்கும் மராட்டியத்தில் இருந்து தான் ஆக்சிஜன் வந்தது. அங்கு ஆக்சிஜன் அனுப்புவதை மராட்டியம் நிறுத்தி விட்டது.

இதனால் மத்திய பிரதேச மாநில முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் மராட்டிய அரசிடம் பேசி கூடுதல் சிலிண்டர்களை அனுப்பும்படி கேட்டு இருக்கிறார்.

இதேபோல் உத்தரபிரதேசம், குஜராத், பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அங்கும் தட்டுப்பாடு காரணமாக உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளன.

Tags:    

Similar News