செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 23 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

Published On 2021-07-30 06:25 GMT   |   Update On 2021-07-30 06:25 GMT
இனிவரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக உயர வாய்ப்புள்ளது.
மேட்டூர்:

கேரளா மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

இதனால் அந்த அணைகளில் இருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டு தற்போது கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் ஆகிய 2 அணைகளில் இருந்தும் 14 ஆயிரத்து 605 கனஅடி தண்ணீர் மட்டுமே காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து சரிய தொடங்கியுள்ளது. ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் 34 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக சரிந்து தற்போது 24 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும், மெயினருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. நேற்று முன்தினம் 29 ஆயிரத்து 666 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று மேலும் சரிந்து 22 ஆயிரம் கனஅடியாக வந்தது. இன்று சற்று அதிகரித்து 22 ஆயிரத்து 942 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து காவிரியில் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

நேற்று 80.24 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 81.97 அடியாக உயர்ந்தது. இனிவரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக உயர வாய்ப்புள்ளது.
Tags:    

Similar News