ஆன்மிகம்
கோனார்க் கோவில்

ஆன்மிகத்தையும், அறிவியலையும் ஒன்றாக கலந்த கோனார்க் கோவில்

Published On 2021-10-20 04:16 GMT   |   Update On 2021-10-20 06:50 GMT
கோனார்க் சூரிய கோவிலுக்கு அருகிலேயே பாழடைந்த நிலையில் இரண்டு கோவில்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அதிலொரு கோவில் சூரிய பகவானின் மனைவியான மாயாதேவியுடையது.
யுனஸ்கோவின் உலகப் பாரம்பரிய சின்னங்களில் ஒன்று கோனார்க் கோவில். சூரிய பகவானை மூலவராக கொண்டிருக்கும் ‘கோனார்க்’ கோவில் ஆன்மிகத்தையும், அறிவியலையும் ஒன்றாக கலந்த ‘கால கடிகாரம்’ போல செயல்படுகிறது..! அதன் சுவாரசியத்தை விளக்கும் தகவல் தொகுப்பு இது...!

யார் கட்டியது ?

கீழை கங்கா் வம்சத்தைச் சோ்ந்த முதலாம் நரசிம்ம தேவன் என்ற மன்னனால், 13-ம் நூற்றாண்டில் (கி.பி. 1236-1264) கட்டப்பட்டது. இதனைக் கட்டி முடிக்க பேரரசின் 12 ஆண்டு கால வருமானமும் செலவிடப்பட்டது. இயற்கை பேரிடர்களை சந்தித்து, இப்போது சிதலமடைந்து நிற்கிறது.

எங்கு இருக்கிறது..?

இந்தியாவின் ஒடிசா மாநிலம், பூரி ரெயில் நிலையத்தில் இருந்து 31 கிலோமீட்டா் தொலைவில் இருக்கிறது.

கால ஓட்டத்திற்கு ஏற்பவும், சூரியனின் நகர்வுக்கு ஏற்பவும், சூரிய ஒளி மூலவர் சிலை மீது படும் வகையில் கோவிலை கட்டியிருக்கிறார்கள்.

கோவிலின் விமானம் சரியும் நிலையில் இருப்பதால், இங்குள்ள மூலவரான சூரியன் சிலை, பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். எனவே இங்கு உருவ வழிபாடு எதுவும் இல்லை.

ஈர்ப்பு விசை தூண்

இந்த ஆலயத்தில் தூண்களே கிடையாது. இருப்பினும் ஒவ்வொரு கற்களுக்கும் நடுவே நிறைய இரும்புத் துண்டுகள் உள்ளது. ஒரு முறை கோவில் மேற்பகுதி சேதமடைந்து விழுந்தபோது, கோபுர உச்சியில் சுமார் 50 டன் எடையிலான பிரம்மாண்ட காந்தக்கல் இருப்பதை கண்டுபிடித்தனர். அந்த காந்தக்கல்தான், இரும்பு துண்டுகளை வலுவாக ஈர்த்து, தூண்களுக்கான வேலையை செய்திருக்கிறது.

சிறப்பு..!

ஏழு குதிரைகள் பூட்டி, 24 சக்கரங்களைக் கொண்ட தேரில் சூரிய பகவான் எழுந்தருள்வது போல் இந்த கோவிலை உருவாக்கி உள்ளனர். ஏழு குதிரைகள் என்பது ஏழு நாட்களையும், 24 சக்கரங்கள் என்பது 24 மணி நேரத்தையும் குறிக்கும் விதத்தில் இந்த கோவிலின் அமைப்பு உள்ளது.

மைதுன சிற்பங்கள்

கஜுராஹோவில் இருப்பது போன்றே ஏராளமான மைதுன சிற்பங்கள் இங்கு இருக்கின்றன. இச்சிற்பங்கள் காலப்போக்கில் சற்றே சிதைந்து போயிருக்கின்றன.

மாயாதேவி

கோனார்க் சூரிய கோவிலுக்கு அருகிலேயே பாழடைந்த நிலையில் இரண்டு கோவில்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அதிலொரு கோவில் சூரிய பகவானின் மனைவியான மாயாதேவியுடையது.
Tags:    

Similar News