செய்திகள்
கொரோனா பரிசோதனை

தமிழகம் உள்பட வெளிமாநிலங்களில் இருந்து பெங்களூரு வருவோருக்கு புதிய கட்டுப்பாடு

Published On 2021-08-04 01:57 GMT   |   Update On 2021-08-04 01:57 GMT
வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் மூலம் வைரஸ் பரவுவதை தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்டாயம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
பெங்களூரு :

கர்நாடகத்தில் கொரோனா முதல் அலையை காட்டிலும் 2-வது அலை கோர தாண்டவமாடியது. நாள் தோறும் பாதிப்பு 50 ஆயிரத்தை கடந்து பதிவானது. மேலும் தினமும் 1,000 மேற்பட்டோர் உயிரிழந்து வந்தனர். அதன் பிறகு அரசின் தீவிர நடவடிக்கையாலும், ஊரடங்காலும் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது.

இதனால் ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா 3-வது அலை தொடங்கியதாக கூறப்படுகிறது.

இதனால் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. பெங்களூருவில் தினசரி பாதிப்பு 400-க்கும் அதிகமாகவே பதிவாகி வருகிறது.

இது கொரோனா 3-வது அலையின் முன்னோட்டமாக இருக்கலாம் என்று கர்நாடக அரசுக்கு மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் தமிழகம் உள்பட வெளிமாநிலங்களில் இருந்து பெங்களூரு வருபவர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது வெளிமாநிலங்களில் இருந்து பெங்களூரு வருவோர் கட்டாயம் கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழை காட்ட வேண்டும் என்று பெங்களூரு மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ்குப்தா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகம் உள்பட வெளிமாநிலங்களில் இருந்து பெங்களூரு வருபவர்கள் ஆர்.டி.பி.சி.ஆர்.
கொரோனா
‘நெகட்டிவ்’ சான்றிதழ் காட்ட வேண்டும். ஒருவேளை பரிசோதனை சான்றிதழ் இல்லாமல் வருபவர்களின் சளி மாதிரி சேகரிக்கப்படும். அதன் முடிவு வரும் வரை அரசின் கண்காணிப்பு முகாம்களில் அவர்கள் தங்க வைக்கப்படுவார்கள். இதற்காக ஆகும் செலவை அவர்களே ஏற்க வேண்டும். இதற்கான கட்டணத்தை நாங்கள் நிர்ணயம் செய்துள்ளோம்.

பரிசோதனை முடிவில் வைரஸ் தொற்று இல்லை என்று உறுதியானால், அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், அத்தகையவர்கள் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்படுவார்கள். பெங்களூருவில் தற்போது உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும். தற்போதைய சூழ்நிலையில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டம் இல்லை. பாதிப்பு அதிகரித்தால், வார இறுதி ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும்.

வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் மூலம் வைரஸ் பரவுவதை தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்டாயம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். யாரும் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது. பெங்களூருவில் தற்போது அடுக்குமாடி குடியிருப்புகளில் தான் அதிகளவில் கொரோனா பரவி வருகிறது.

தனியார் மருத்துவமனை நிர்வாகங்களுடன் பேச்சு நடத்துவோம். எந்த நேரத்திலும் பாதி படுக்கைகளை அரசுக்கு ஒப்படைக்க அவர்கள் தயாராக இருக்க வேண்டும். நகரில் சில சாலைகளில் ஸ்மார்ட் பார்க்கிங் கட்டமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. இதை சில விஷமிகள் சேதப்படுத்துவதாக எங்களுக்கு புகார் வந்துள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கவுரவ் குப்தா கூறினார்.
Tags:    

Similar News