செய்திகள்
முருகன்

கோர்ட்டு அறிவுரையை மீறி முருகன் உண்ணாவிரதம் - வக்கீல்கள் சந்திக்க முடிவு

Published On 2019-11-15 06:57 GMT   |   Update On 2019-11-15 06:57 GMT
வேலூர் ஜெயிலில் இன்று 5-வது நாளாக முருகன் உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில், அவரது வக்கீல்கள் முருகனை சந்திக்க உள்ளதாக தெரிவித்தனர்.
வேலூர்:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதியான முருகன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 18-ந் தேதி அவரது அறையில் இருந்து செல்போன் பறிமுதல் செய்தனர். பின்னர் முருகன் தனி அறைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு சலுகைகள் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் சிறை அதிகாரிகள் தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி முருகன் 18-ந்தேதியில் இருந்து தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்தார்.

சிறை அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி 20 நாட்களாக இருந்த உண்ணாவிரதத்தை கடந்த 6-ந்தேதி முருகன் கைவிட்டார். இதையடுத்து நளினியுடன் சந்திக்க அனுமதியளித்தனர்.

தனி சிறை வேண்டாம். ஏற்கனவே இருந்த அறையில் அடைக்குமாறும் அல்லது புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என்று முருகன் சிறை அதிகாரிகளிடம் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு சிறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் தன்னை மீண்டும் பழைய அறைக்கு மாற்றும் வரை தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவேன் என்று சிறை போலீசாரிடம் முருகன் 11-ந் தேதி மனு அளித்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அதைத் தொடர்ந்து இன்று 5-வது நாளாக முருகன் சாப்பிட மறுத்து தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் முருகனை அவரது மனைவி மற்றும் உறவினர்கள் சந்திக்க அனுமதிக்க கோரி முருகனின் உறவினர் தேன்மொழி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிறைத்துறை அதிகாரிகள், முருகனை அவரது மனைவி நளினி மற்றும் அவரது உறவினர்கள் சந்திக்க அனுமதி வழங்க வேண்டும்.

நிர்வாகக் காரணங்களுக்காக சிறைச்சாலையின் மற்றொரு பகுதிக்கு முருகனை மாற்றியுள்ளதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

எனவே, அதில் கோர்ட்டு தலையிட முடியாது. அவருக்கு விதிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச தண்டனையை அதிகாரிகள் தளர்த்திக் கொள்ள வேண்டும்.

இனிவரும் காலங்களில் முருகன் சிறைக்குள் இதுபோன்ற உண்ணாவிரதம் இருக்க கூடாது என மனுதாரர் அவரது வக்கீல்கள் அறிவுறுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

ஆனால் முருகன் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இது தொடர்பாக அவரது வக்கீல்கள் முருகனை சந்திக்க உள்ளதாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News