செய்திகள்
கோப்புப்படம்

திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் 3½ கிலோ தங்கம் பறிமுதல்

Published On 2020-11-23 18:14 GMT   |   Update On 2020-11-23 18:14 GMT
திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் 3½ கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
செம்பட்டு:

வெளி நாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளிலிருந்து மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து, “வந்தே பாரத்” திட்டத்தின் கீழ் இந்த சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த விமானத்தில் பயணம் செய்பவர்களில் பலர் சமீப நாட்களாக வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை அதிக அளவில் கடத்தி வருகிறார்கள். குறிப்பாக வியாபாரிகளாக வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் அங்கிருந்து வரும்போது கிலோ கணக்கில் தங்கத்தை கடத்தி வருவதும், அவற்றை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.

குறிப்பாக திருச்சி விமான நிலையத்தில் மட்டும் இந்த மாதம் கடந்த 2-ந் தேதி 2,596 கிராம், 6-ந் தேதி 2,674 கிராம், 10-ந் தேதி 2,500 கிராம், 11-ந் தேதி 895 கிராம், 14-ந் தேதி 905 கிராம், 19-ந் தேதி 200 கிராம், 21-ந் தேதி 966 கிராம் கடத்தல் தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை 5.15 மணிக்கு துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த சிறப்பு விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்போது அதிராம்பட்டினத்தை சேர்ந்த அகமதுநபீஸ், திருச்சியை சேர்ந்த ரமீஸ்ரஹமதுல்லா ஆகிய 2 பயணிகளின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்கள் இருவரையும் தனியே அழைத்துச்சென்று சோதனை செய்தனர்.

அப்போது அவர்கள், தங்கள் உடலில் 3,605 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.1 கோடியே 87 லட்சம் ஆகும்.

இந்த மாதத்தில் மட்டும் திருச்சி விமான நிலையத்தில் நேற்று வரை 10¾ கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் சிக்கித்தவிப்பவர்களுக்காக இயக்கப்படும் சிறப்பு விமானங்களில் இதுபோன்று தங்கத்தை கடத்தும் சம்பவம் அதிகாரிகளை வேதனை அடைய செய்துள்ளது.
Tags:    

Similar News