செய்திகள்
முகுல் ராய்

பாஜகவில் யாரும் நீடிக்கமாட்டார்கள் -திரிணாமுல் காங்கிரசில் இணைந்த முகுல் ராய் பேட்டி

Published On 2021-06-11 12:37 GMT   |   Update On 2021-06-11 12:37 GMT
சில துரோகிகள் உள்ளனர், அவர்கள் திரிணாமுல் காங்கிரசுக்கு வந்தாலும் வரவேற்க மாட்டோம் என மம்தா பானர்ஜி குறிப்பிட்டார்.
கொல்கத்தா:

பாஜக தேசிய துணைத் தலைவர் முகுல் ராய் இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவரது மகன் சுப்ரான்ஷூவும் திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்தார். பாஜகவின் முக்கிய தலைவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பியது மேற்கு வங்காள அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவில் இணைந்தது குறித்து முகுல் ராய் கூறுகையில், எங்கு இருந்தேனோ அங்கேயே மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், இனி பாஜக உடன் எந்த உறவும் இல்லை என்றும் கூறினார். தற்போதைய சூழ்நிலையில், பாரதீய ஜனதா கட்சியில் யாரும் நீடிக்க மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். 




முகுல் ராய் கட்சிக்கு திரும்பியதை கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி வரவேற்றுள்ளார். கசப்பான சட்டமன்றத் தேர்தலில் கூட, முகுல் தனக்கு எதிராக எதுவும் பேசியதில்லை என்றும், கட்சியில் இருந்து விலகிச் சென்ற மேலும் பலர் திரும்பி வருவார்கள் என்றும் கூறினார். ஆனால், சில துரோகிகள் உள்ளனர், அவர்கள் வந்தாலும் வரவேற்க மாட்டோம் என மம்தா குறிப்பிட்டார்.

மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக திரிணாமுல் காங்கிரசில் இருந்து பல நிர்வாகிகள் பாஜகவுக்கு தாவினர். அவர்களில் பலர் வருத்தம் தெரிவித்துள்ள நேரத்தில் முகுல் ராய் திரும்பியிருப்பது கட்சிக்கு மேலும் வலு சேர்த்திருக்கிறது.
Tags:    

Similar News