வழிபாடு
சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி

நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு 4-ந்தேதி அய்யா வைகுண்ட சாமி அவதார தின விழா ஊர்வலம்

Published On 2022-03-02 07:45 GMT   |   Update On 2022-03-02 07:45 GMT
வைகுண்ட சாமியின் அவதார தினமான 4-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் இருந்து அவதார தின விழா மாசி ஊர்வலம் சாமிதோப்பு நோக்கிப் புறப்படுகிறது.
குமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற திருத்தலங்களில் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியும் ஒன்றாகும். அய்யா வைகுண்ட சாமியின் அவதார தினமான மாசி 20-ந் தேதியை அவதார தின விழாவாக அய்யாவழி மக்கள் கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்பு தலைமைப்பதிக்கு அவதார தின விழா ஊர்வலம் நடைபெறுவது வழக்கம்.

இந்த வருடம் 190-வது அவதார தின ஊர்வலம் வருகிற 4-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

இதையொட்டி 3-ந் தேதி காலை 6 மணிக்கு அய்யா வைகுண்டசாமி விஞ்சை பெற்ற திருச்செந்தூர், செந்தூர் பதியில் இருந்து நாகர்கோவிலை நோக்கி வாகன பேரணி ஒன்று புறப்படுகிறது. இதற்கு ஜனா. வைகுந்த் தலைமை தாங்குகிறார். இந்த பேரணி திருச்செந்தூர் சீர்காய்ச்சி, திசையன்விளை, உடன்குடி, கூடங்குளம், செட்டிகுளம், ஆரல்வாய்மொழி வழியாக இரவு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைகிறது.

இதே போல் திருவனந்தபுரம் சிங்காரத்தோப்பு, பத்மநாபசாமி கோவில் வடக்கு வாசலில் இருந்து காலை 9 மணிக்கு மற்றொரு வாகன பேரணி புறப்படுகிறது. இதை பால.லோகாதிபதி தொடங்கி வைக்கிறார். பேரணிக்கு பையன் நேம்ரிஷ் தலைமை தாங்குகிறார். இந்த வாகன பேரணி திருவனந்தபுரம், பாறசாலை, குழித்துறை, மார்த்தாண்டம், தக்கலை, வெட்டூர்ணிமடம் வழியாக இரவு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை அடைகிறது.

இதைப்போல பல ஊர்களில் உள்ள அய்யாவழி நிழல் தாங்கலில் இருந்து அய்யா வழி மக்களும் நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலுக்கு ஊர்வலமாக வருகிறார்கள்.

அதைத்தொடர்ந்து அங்கு இரவு 10 மணிக்கு மாசி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு பால. ஜனாதிபதி தலைமை தாங்குகிறார். இதில் அய்யாவழியை சேர்ந்தவர்கள் பலர் பேசுகின்றனர். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

முன்னதாக மாலை 6 மணிக்கு சாமிதோப்பு தலைமைப்பதியிலிருந்து வைகுண்ட தீபம் கொண்டுசென்று ஆதலவிளை மாமலையில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு பையன் கிருஷ்ணராஜ் தலைமை தாங்குகிறார்.

வைகுண்ட சாமியின் அவதார தினமான 4-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் இருந்து அவதார தின விழா மாசி ஊர்வலம் சாமிதோப்பு நோக்கிப் புறப்படுகிறது. இதற்கு பால. ஜனாதிபதி தலைமை தாங்குகிறார். ஜனா.யுகேந்த் முன்னிலை வகிக்கிறார். ஊர்வலம் நாகர்கோவில் கோட்டார், சுசீந்திரம், வழுக்கம்பாறை, வடக்கு தாமரைகுளம் வழியாக சாமி தோப்பு தலைமைப்பதியை வந்தடைகிறது.

ஊர்வலம் வரும் வழியில் பல மதத்தை சேர்ந்தவர்களும் மற்றும் அய்யாவழி பக்தர்களும் வரவேற்பு கொடுக்கின்றனர். அன்று இரவு சாமிதோப்பு தலைமைப்பதியில் வாகன பவனியும், அன்னதானமும், அய்யாவழி மாநாடும் நடைபெறுகிறது. அய்யா வைகுண்ட சாமியின் அவதார தினமான மார்ச் 4-ம் தேதி குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News