செய்திகள்
மாநில தலைவராக பொறுப்பேற்ற அண்ணாமலைக்கு வாழ்த்து தெரிவித்த எல்.முருகன், சி.டி.ரவி

தமிழக பா.ஜனதா தலைவராக அண்ணாமலை பொறுப்பு ஏற்றார்

Published On 2021-07-16 11:22 GMT   |   Update On 2021-07-16 11:22 GMT
தமிழக பா.ஜனதாவின் முதல் தலைவர் மறைந்த நாராயணராவ் வீடு தாம்பரத்தில் உள்ளது. அவரது வீட்டுக்கு இன்று காலை சென்ற அண்ணாமலை நாராயணராவின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

சென்னை:

மத்திய மந்திரி சபை சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது தமிழக பா.ஜனதா தலைவராக இருந்த எல்.முருகனுக்கு மத்திய இணை மந்திரி பொறுப்பு வழங்கப்பட்டது.

இதையடுத்து தமிழக பா.ஜனதா புதிய தலைவராக கே. அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டார். அவர் இன்று தி.நகரில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பதவி ஏற்றார்.

பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதற்காக  அண்ணாமலை  நேற்று முன்தினம் (14-ந் தேதி) கோவையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டார். பின்னர் அவர் பல்லடம், திருப்பூர், பெருந்துறை, ஈரோடு, சங்ககிரி, சேலம், நாமக்கல், பரமத்திவேலூர், கரூர், குளித்தலை வழியாக திருச்சி வந்தடைந்தார். திருச்சியில் அவர் தங்கினார்.

நேற்று காலை திருச்சியில் இருந்து புறப்பட்ட அவர் பெரம்பலூர், தொழுதூர் சந்திப்பு, வேப்பூர் சந்திப்பு, உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம், மேல்மருவத்தூர், மதுராந்தகம், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி வழியாக ஊர்வலமாக வந்தார். வரும் வழியில் எல்லாம் அவருக்கு பா.ஜனதா நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நேற்று இரவு 11.30 மணிக்கு அவர் கிழக்கு தாம்பரம் வந்தார். அங்கு அவருக்கு தமிழக பா.ஜனதா நிர்வாகிகள் கரு.நாகராஜன், செம்பாக்கம் வேதாசுப்பிரமணியம், வினோஜ் பி.செல்வம், விவின் பாஸ்கரன், முகப்பேர் செல்லத்துரை உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் பா.ஜனதா தொண்டர்கள் மத்தியில் அவர் பேசினார். நேற்று இரவு அவர் தாம்பரத்தில் தங்கினார்.

தமிழக பா.ஜனதாவின் முதல் தலைவர் மறைந்த நாராயணராவ் வீடு தாம்பரத்தில் உள்ளது. அவரது வீட்டுக்கு இன்று காலை சென்ற அண்ணாமலை நாராயணராவின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

அதன்பிறகு அண்ணாமலை அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டார். பல்லாவரம், ஆலந்தூர், சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் அவருக்கு பா.ஜனதா தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தார்கள். மதியம் 1.30 மணிக்கு அண்ணாமலை பா.ஜனதா தலைமை அலுவலகமான தி.நகர் கமலாலயத்திற்கு வந்தார். அவருக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

 


மத்திய மந்திரி எல்.முருகன், பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி, இணைப் பொறுப்பாளர் பி.சுதாகர்ரெட்டி, இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, நயினார் நாகேந்திரன், எம்.எல்.ஏ.க்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

பின்னர் பிற்பகல் 2 மணிக்கு தமிழக பா.ஜனதா தலைவராக அண்ணாமலை பொறுப்பு ஏற்றார். அவருக்கு நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழக பாரதீய ஜனதா தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதையொட்டி பா.ஜனதா தலைமை அலுவலகமான கமலாலயம் விழாக் கோலம் பூண்டிருந்தது. அங்கு மாவிலை தோரணம், குருத்தோலை தோரணம், வேப்பிலை தோரணங்கள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

தி.நகர் போக் சாலையில் இருந்து கமலாலயம் வரை பா.ஜனதா கட்சி கொடி தோரணம் கட்டப்பட்டு இருந்தது.

முன்னதாக மத்திய மந்திரியாக பதவி ஏற்ற எல்.முருகன் இன்று காலை விமானம் மூலம் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வந்து அவருக்கு மாலை அணிவித்து வரவேற்றனர்.

பின்னர் அவர் தி.நகரில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அங்கும் திரளான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

Tags:    

Similar News