செய்திகள்
அமிர்தலிங்கம்- பிரபு

திருத்துறைப்பூண்டியில் தந்தை இறந்த அதிர்ச்சியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2020-09-16 09:12 GMT   |   Update On 2020-09-16 09:12 GMT
திருத்துறைப்பூண்டியில் தந்தை இறந்த அதிர்ச்சியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேலகொருக்கையைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம்(வயது 58). விவசாயியான இவர் கொருக்கை ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவராக இருந்துள்ளார். இவருக்கு பிரபு(23) என்ற மகன் இருந்தார். அமிர்தலிங்கம் சிறிது காலம் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் அமிர்தலிங்கம் தனது வயலில் ஆட்களை வைத்து நடவு பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி அமிர்தலிங்கம் திடீரென உயிரிழந்தார். மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள், அமிர்தலிங்கத்திற்கு மூச்சுச்திணறல் இருந்ததாகவும், ஆகையால் அவருக்கு கொரோனா தொற்று இருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறி உள்ளனர்.

இதனைத்தொடர்ந்து திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சிவக்குமார், திருத்துறைப்பூண்டி வட்டார மருத்துவ அலுவலர் கவுரி உள்ளிட்டோர் அமிர்தலிங்கத்தின் உடலை பாதுகாப்பாக ‘பேக்கிங்’ செய்து தருகிறோம் என்று கூறியுள்ளனர். தகவல் அறிந்து அரசு மருத்துவமனைக்கு வந்த அமிர்தலிங்கத்தின் மகன் பிரபு தனது தந்தை இறந்ததை பார்த்து கதறி அழுதார்.

தனது தந்தையின் இறப்பை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன்னை பெற்று வளர்த்த தந்தை திடீரென இறந்து விட்டாரே இனி எனக்கு யார் ஆதரவு என்று புலம்பி உள்ளார். தந்தையின் உடல் வீட்டுக்கு எடுத்துச் செல்வதற்கு முன் நாம் உயிரோடு இருக்கக் கூடாது என்று எண்ணிய பிரபு வீட்டிற்கு சென்று வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை(விஷம்) குடித்து விட்டார்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையிலேயே பிரபு பரிதாபமாக உயிரிழந்தார்.

தந்தை இறந்த சோகத்தில் மகன் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த மேலகொருக்கை மற்றும் திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்த அ.ம.மு.க. பிரமுகர்கள் மற்றும் அமிர்தலிங்கத்தின் உறவினர்கள் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை முன்பு திரண்டு அமிர்தலிங்கத்திற்கு கொரோனா தொற்று இருக்க வாய்ப்பில்லை எனக்கூறினர்.

பின்னர் அவரது உடலை உடனடியாக தங்களிடம் கொடுக்குமாறு அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டனர். அதற்கு மருத்துவமனை நிர்வாகம், முறையாக, பாதுகாப்பதோடுதான் வழங்க முடியும் என கூறினர். இதற்கிடையில் கொருக்கையை சேர்ந்த மேலும் பலர் மருத்துவமனைக்கு திரண்டு வந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.

தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் தேவதாஸ் மற்றும் போலீசார் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை முன்பு கூடி இருந்தவர்களிடம், அரசு விதிமுறைப்படி உடலை முறையாக ‘பேக்கிங்’ செய்து தர ஏற்பாடு செய்வதாக கூறினர். பின்னர் இரவு 8 மணி அளவில் அமிர்தலிங்கத்தின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News