உள்ளூர் செய்திகள்
ஓட்டலில் இருக்கைகள் சூறையாடப்பட்டுள்ளதை படத்தில காணலாம்.

நாங்குநேரி ஐ.டி. பார்க் அருகே ஓட்டலை சூறையாடிய கும்பல்

Published On 2022-01-15 07:06 GMT   |   Update On 2022-01-15 07:06 GMT
நாங்குநேரி ஐ.டி. பார்க் அருகே ஓட்டலை சூறையாடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். போலீசாரின் ரோந்து நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

நாங்குநேரி:

நாங்குநேரி அருகே நான்கு வழிச்சாலையில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதன் எதிரே வள்ளியூரை சேர்ந்த விஜய்(வயது 45) என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார்.

நேற்று பொங்கலையொட்டி ஓட்டலை வழக்கமான நேரத்தை விட சீக்கிரமாகவே அடைத்துவிட விஜய் முடிவு செய்தார். கடையை அடைத்துக்கொண்டு இருக்கும்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் தங்களுக்கு பசி அதிகமாக இருப்பதாகவும், எப்படியாவது சாப்பாடு போடும்படியும் கேட்டுள்ளனர்.

உடனே விஜய்யும் அவர்களுக்கு சாப்பாடு பரிமாறி உள்ளார். அப்போது தங்களது நண்பர்கள் மேலும் சிலர் வருவதாக கூறிய அவர்கள் மது போதையில் அங்கேயே வாந்தி எடுத்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த விஜய் உடனடியாக கடையை விட்டு வெளியேறும்படி கூறி உள்ளார். அப்போது இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த தகராறில் மதுபோதையில் இருந்த அந்த வாலிபர்கள் ஓட்டலை அடித்து நொறுக்கினர். அங்கு வந்த அவர்களது நண்பர்கள் சுமார் 8-க்கும் மேற்பட்டோரும் சேர்ந்து ஓட்டல் கண்ணாடிகள், சேர்கள் உள்ளிட்டவற்றையும் சேதப்படுத்திவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சிலரை பிடித்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

நான்குவழிச்சாலையில் வாகனங்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதன் எதிரே ஐ.டி. பூங்காவும் செயல்பட்டு வருகிறது.

எனவே பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க இந்த பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். போலீசாரின் ரோந்து நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

Tags:    

Similar News