செய்திகள்
ஆர்ப்பாட்டம்

ராமேசுவரம் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2021-10-13 09:56 GMT   |   Update On 2021-10-13 09:56 GMT
படகுகளை மீன் பிடிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் கடந்த ஒரு வார காலமாக மீண்டும் ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராமேசுவரம்:

கச்சத்தீவு கடலோரப் பகுதியில் பல தலைமுறையாக மீன் பிடித்து வரும் ராமேசுவரம் உள்பட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீன்பிடிக்க விடாமல் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி அவ்வப்போது அடித்து துன்புறுத்தி மிகவும் சேதப்படுத்தி அச்சுறுத்தி விரட்டி அடிக்கின்றனர்.

இதனால் தமிழக மீனவர்கள் கச்சத்தீவு கடல் பகுதியில் மீன் பிடிக்க முடியாமல் பல லட்சம் ரூபாய் நஷ்டமடைந்து வருகின்றனர்.

தமிழக மீனவர்கள் கச்சத்தீவில் மீன் பிடித்துக் கொண்டு வலைகளை உலர வைத்து தங்கி வருவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை அரசு அத்துமீறி இந்திய கடலோரப் பகுதியில் வந்து சிறைபிடிக்கப்பட்டு சென்ற தமிழக மீனவர்கள் 150-க்கும் மேற்பட்ட படகுகள் இந்திய கடலோரப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு கடலில் மூழ்கி சேதமடைந்தன.

இதற்கு தமிழக மீனவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் உடனடி நிவாரணம் வழங்கி அவர்களின் குடும்பத்தினரை வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசு அனுமதி பெற்று ராமேசுவரம் துறைமுக கடலோரப் பகுதியில் பல ஆண்டுகளாக மீன்பிடித்து வந்த 19 படகுகளை தற்போது ராமேசுவரம் மீன் துறை அதிகாரிகள் புதிய படகுக்கு அனுமதி இல்லை என மீன்பிடிக்க அனுமதிக்காமல் படகுகளை கடலோரத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

இதனால் 19 படகு சார்ந்த மீனவர்கள் மீனவ குடும்பங்களும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அதனால் இந்த படகுகளை மீன் பிடிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் கடந்த ஒரு வார காலமாக மீண்டும் ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இன்று ராமேசுவரம் பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மீனவர் சங்க தலைவர் ஜேசுராஜா, எமது சகாயம் தலைமை தாங்கினார்கள். ஆர்ப்பாட்டத்தில் மீனவர்கள் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர்.

Tags:    

Similar News