செய்திகள்
கோப்புபடம்

பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் குழந்தைகள் திருமணம் அதிகரிப்பு - எம்.பி.க்கள் குழு தகவல்

Published On 2021-08-09 07:08 GMT   |   Update On 2021-08-09 08:50 GMT
அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டங்களை விரைவாக கொண்டு வர மாணவர்களுக்கு உரிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என எம்.பி.க்கள் குழு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி:

கொரோனாவால் பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதனால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக பாராளுமன்ற எம்.பி.க்கள் கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர் விளையாட்டு நலத்துறை நிலைக்குழு ஆய்வு மேற்கொண்டது.

இதுதொடர்பான அறிக்கையை நிலைக்குழு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதால் மாணவர்களுக்கு மனரீதியாக கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் பாடத்திட்டத்தால் அவர்களுடைய கற்கும் திறன் குறைந்து இருக்கிறது.

பெற்றோர்கள்- குழந்தைகள் உறவில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. பல்வேறு விதமான மனக்குழப்பங்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல சமூக ரீதியாக பெண் குழந்தைகள் இதில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால் பல இடங்களில் பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடப்பது அதிகரித்து இருக்கிறது.

இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டுமென்றால் அனைத்து மாநிலங்களிலும் விரைவாக பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை திறக்கலாம்.


இத்துடன் அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டங்களை விரைவாக கொண்டு வர வேண்டும். மாணவர்களுக்கு உரிய விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.

இதையும் படியுங்கள்...உள்நாட்டில் உருவாக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி கப்பல் - ரூ.23 ஆயிரம் கோடியில் உருவாக்கப்பட்டது

Tags:    

Similar News