ஆன்மிகம்
திருக்குர்ஆன்

ஆன்மிக உயிரோட்டத்தின் கருவி திருக்குர்ஆன்

Published On 2019-10-25 04:50 GMT   |   Update On 2019-10-25 04:50 GMT
மனிதன் உயிர்வாழ காற்று தேவைப்படுவது போன்று, ஓரிடம் விட்டு மற்றோர் இடம் செல்ல வாகனம் தேவைப்படுவதுபோன்று, சமூகப்பிரச்சினைகளைக் களைவதற்கு ஒரு கருவி தேவைப்படுகிறது.
மனிதன் உயிர்வாழ காற்று தேவைப்படுவது போன்று, ஓரிடம் விட்டு மற்றோர் இடம் செல்ல வாகனம் தேவைப்படுவதுபோன்று, சமூகப்பிரச்சினைகளைக் களைவதற்கு ஒரு கருவி தேவைப்படுகிறது.

அந்தக்கருவிதான் அல்லாஹ்வுடைய வேதமாகிய திருக்குர்ஆன். உடலுக்கு உணவு எனும் ஊட்டச்சத்து தேவைப்படுவது போன்று, மனித உணர்வுக்கும் ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. மனிதனின் ஆன்மிக உணர்வை உயிரோட்டத்துடன் வைத்திருக்க வேண்டுமென்றால் வான்மறைக் குர்ஆனின் தொடர்பு அவசியம் தேவை.

அன்றைய அரபுகுலத்தில் வாழ்ந்து வந்த கரடுமுரடான மனிதர்களை திருக்குர்ஆன் எனும் இந்தக்கருவிதான் பண்பாடுமிக்கவர்களாக, மென்மையானவர்களாக மாற்றியது. நூலைப்போன்று பிரிந்து கிடந்த மக்களை ஆடையைப்போன்று ஒன்று சேர்த்தது. நாகரிகம் என்றால் என்னவென்றே தெரியாமல் கிடந்த மக்களின் வாழ்க்கையை இந்தக் திருக்குர்ஆன் தான் புரட்டிப்போட்டது.

23 வருட காலகட்டத்தில் திருக்குர்ஆன் செய்த புரட்சியைப்போன்று மானுட சரித்திரத்தில் வேறு எந்த நூலும் செய்ததில்லை.

நாகரிகம் என்றால் என்ன என்று தெரியாத அரபிகள் உலகிற்கே நாகரிகம் கற்றுத்தந்தது எவ்வாறு?, ஒட்டகங்களையும், ஆடுகளையும் மேய்த்துக் கொண்டிருந்த கிராமப்புற அரபி கள் உலகிற்கே தலைமை தாங்கும் தகுதிபடைத்தவர்களாக மாறியது எவ்வாறு?

அனைத்திற்கும் காரணம் திருக்குர்ஆன்.

தொழுகையில் முதல் வரிசையில் நின்ற நபித்தோழர்கள், இஸ்லாத்தை பரப்புவதிலும் முதல் வரிசையில் நின்றனர். நடமாடும் திருக்குர்ஆன் பிரதிகளாக திகழ்ந்தனர்.

நம்மிடம் இருப்பதும் அதே திருக்குர்ஆன் தான். ஓர் எழுத்து என்ன... ஒரு புள்ளி கூட மாறாமல் இன்றும் நம்மிடம் அதே திருக்குர்ஆன் அப்படியே இருக்கின்றது. நாமும் மாறாமல் அப்படியே இருக்கின்றோம்.

திருமண வாழ்வு பரக்கத் (அருள்வளம்) மிக்கதாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒருசில பகுதிகளில் மணமக்களின் கைகளில் திருக்குர்ஆனைக் கொடுப்பார்கள்.

ஆயினும் அந்த திருக்குர்ஆனில் சொல்லப்பட்டவற்றை செயல்படுத்தினால் அல்லவா ‘பரக்கத்’ கிடைக்கும். வெறுமனே வாங்கி உயரமான ஓரிடத்தில் வைப்பதால் எவ்வாறு அருள் கிடைக்கும்?

இதில் கொடுமை என்னவென்றால் திரு மணத்தின்போது கொடுக்கப்பட்ட அந்த திருக்குர்ஆன் தூசி படிந்து ஓரிடத்தில் இருக்கும். பின்னர் மரணத்தின்போதுதான் யாரே எடுத்து அதை ஓதுவார்கள்.

மனிதன் சந்திக்கும் அனைத்துவிதமான பிரச்சினைகளுக்கும் திருக்குர்ஆன் அழகிய தீர்வுகளை முன்வைக்கிறது. ஆனால் நாமோ, பிரச்சினை ஏற்பட்டால் திருக்குர்ஆன் என்ற நீதியின் பக்கம் செல்லாமல் நீதிமன்றங்களின் பக்கம் சென்று கொண்டிருக்கிறோம்.

பொருளாதாரக் கொடுக்கல்-வாங்கலில் வங்கிகள் சொல்வதைப் பின்பற்றுகிறோம். போராட்டம் என்றால் அரசியல் கட்சிகளைப் போன்று செயல்படுகிறோம். குடும்ப விவகாரம் என்றால் அப்பா-அம்மா சொல்வதை மட்டுமே செவியேற்கிறோம். ‘ஹராம்’, ‘ஹலால்’ என்றால் ‘மனோ இச்சை’ என்ன சொல்கிறதோ அதை மட்டுமே கேட்கிறோம்.

இவ்வாறு எல்லா விவகாரங்களிலும் அருள்மறை திருக்குர்ஆனின் உபதேசங்களை மறந்து மனித வழிகாட்டுதல்களை பின்பற்றுகிறோம். விளைவு பிரச்சினைகளும் தீர்ந்த பாடில்லை. நிம்மதியான வாழ்வும் கிடைத்தபாடில்லை.

ஆக, அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அருள்மறைக் திருக்குர்ஆன் வழிகாட்டியாக இருக்க, முஸ்லிம்களோ மனோஇச்சையின் அடிப்படையில் வேறு எதையோ பின்பற்றிக் கொண்டிருக்கின்றார்கள். ஆகவேதான் மனித வாழ்வு சிரமத்திற்கு மேல் சிரமமாக இருக்கிறது.

இதையே அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்: “எவன் என்னுடைய ‘திக்ரை’ (நல்லுரையைப்) புறக்கணிக்கின்றானோ, அவனுக்கு (இவ்வுலகில்) கடினமான வாழ்க்கை இருக்கிறது”. (திருக்குர்ஆன் 20:124)

நமது நடத்தை எப்படி இருக்க வேண்டும் என்று திருக்குர்ஆனிடம் கேட்பதில்லை, நமது வியாபாரம் எவ்வாறு அமைய வேண்டும் என்று திருக்குர்ஆனிடம் விசாரிப்பதில்லை, என் நட்பு யாருடன் இருக்க வேண்டும்?, நான் விட்டுவிட வேண்டிய கெட்ட குணங்கள் என்னென்ன?, நான் கடை பிடிக்க வேண்டிய நற்குணங்கள் என்னென்ன?, எதில் எனது வெற்றி இருக்கின்றது?, எதில் எனது தோல்வி இருக்கின்றது? என்று திருக்குர்ஆனைக் கேட்க மறந்தோம்.

‘இறையச்சத்தைக் குறித்து இந்த திருக்குர்ஆன் பேசுகின்றதே; நான் எப்போது இறையச்சம் நிறைந்தவனாக மாறப்போகின்றேன்’ என்று திருக்குர்ஆன் ஓதும்போது என்றைக்காவது யோசித்ததுண்டா?

இந்த திருக்குர்ஆன் ‘தவக்குல்’ எனும் அல்லாஹ்வை சார்ந்திருப்பது குறித்துப் பேசுகின்றதே; நான் எப்போது ‘தவக்குல்’ கொண்டவனாக மாறப்போகின்றேன் என்று திருக்குர்ஆன் ஓதும்போது என்றைக்காவது யோசித்ததுண்டா?

இந்த திருக்குர்ஆன் உண்மையைக் குறித்துப் பேசுகின்றதே; நான் எப்போது உண்மையை மட்டும் பேசுபவனாக மாறப்போகின்றேன் என்று திருக்குர்ஆன் ஓதும்போது என்றைக்காவது யோசித்ததுண்டா?

பொறுமை குறித்து இந்த திருக்குர்ஆன் பேசுகின்றதே; நான் எப்போது பொறுமையாளனாக மாறப்போகின்றேன் என்று திருக்குர்ஆன் ஓதும்போது என்றைக்காவது யோசித்ததுண்டா?

பாவமன்னிப்பு குறித்து இந்தக் திருக்குர்ஆன் பேசுகின்றதே; நான் எப்போது பாவமன்னிப்புக் கேட்கப் போகின்றேன் என்று திருக்குர்ஆன் ஓதும்போது என்றைக்காவது யோசித்ததுண்டா?

இந்த திருக்குர்ஆன் நாவைப் பேணுவது குறித்துப் பேசுகின்றதே; நான் எப்போது என் நாவை பேணப் போகின்றேன் என்று திருக்குர்ஆன் ஓதும்போது என்றைக்காவது யோசித்ததுண்டா?

மரணம், மண்ணறை மற்றும் சுவனம் குறித்து இந்த திருக்குர்ஆன் பேசுகின்றது, இவற்றுக்காக என்னை நான் தயார் செய்துள்ளேனா என்று திருக்குர்ஆன் ஓதும்போது என்றைக்காவது யோசித்ததுண்டா?

அல்லாஹ் விரும்பும் செயல்களைக் குறித்து இந்த திருக்குர்ஆன் பேசுகின்றதே; நான் எப்போது அல்லாஹ் விரும்புவதை விரும்பப் போகின்றேன், இந்த திருக்குர்ஆன் அல்லாஹ் வெறுப்பவற்றைக் குறித்துப் பேசுகின்றதே; நான் எப்போது அல்லாஹ் வெறுத்தவற்றை வெறுக்கப் போகின்றேன் என்று திருக்குர்ஆன் ஓதும்போது என்றைக்காவது யோசித்ததுண்டா?

என்னைக் குறித்து பிறருக்கு எடுத்துச் சொல்லுங்கள் என்று இந்த திருக்குர்ஆன் கூறுகின்றதே; நான் எப்போதாவது எடுத்துச் சொல்லியிருக்கின்றேனா, என்று திருக்குர்ஆன் ஓதும்போது என்றைக்காவது யோசித்ததுண்டா?

இந்த ரீதியில் நம்மை நாமே கேள்விகள் கேட்டு திருக்குர்ஆனுடன் நெருக்கம் ஏற் படுத்தும்போது மட்டுமே திருக்குர்ஆனால் நாம் பயன் பெற முடியும்.

ஆஸம் கனி, அஸ்ஸலாம் இஸ்லாமியக் கல்லூரி, திருச்சி.
Tags:    

Similar News