செய்திகள்
திருப்பதி கோவில் (கோப்புப்படம்)

திருப்பதியில் புத்தாண்டையொட்டி சிறப்பு தரிசனங்கள் ரத்து

Published On 2019-12-07 05:34 GMT   |   Update On 2019-12-07 05:34 GMT
திருப்பதியில் வரும் ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் 30, 31, ஜனவரி 1 மற்றும் ஜனவரி 5, 6, 7 ஆகிய தேதிகளில் தேவஸ்தானம் அளித்து வரும் சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
திருமலை:

திருப்பதியில் அன்னமய்ய பவனில் தொலைபேசி மூலம் பக்தர்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு தேவஸ்தான செயல் அதிகாரி அனில் குமார் சிங்கால் பதிலளித்தார். அதைதொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருப்பதியில் வரும் ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் 30, 31, ஜனவரி 1 மற்றும் ஜனவரி 5, 6, 7 ஆகிய தேதிகளில் தேவஸ்தானம் அளித்து வரும் சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட உள்ளன. அந்த நாள்களில் வாடகை அறை முன்பதிவும் ரத்து செய்யப்படும்.

வைகுண்ட ஏகாதசி அன்று காத்திருக்கும் பக்தர்களின் வசதிக்காக மாடவீதிகளில் நிழற்பந்தல் அமைக்கப்பட உள்ளது. வரும் 2020 ஆம் ஆண்டிற்கான தேவஸ்தான நாட்காட்டிகள் மற்றும் கையேடுகள் வரும் 10ஆம் தேதி முதல் தேவஸ்தான தகவல் மையங்களில் விற்பனைக்கு வைக்கப்படும்.

தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ள ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு தற்போது வரை 6,813 பக்தர்கள் நன்கொடை அளித்துள்ளனர்.

சூரிய கிரகணத்தை முன்னிட்டு டிசம்பர் 25-ந்தேதி இரவு 11 மணி முதல் 26-ந் தேதி மதியம் 12 மணிவரை ஏழுமலையான் கோவில் மூடப்பட உள்ளது. 26-ந் தேதி மதியம் 2 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். சூரிய கிரகணத்தை முன்னிட்டு அன்னதானக் கூடமும் மூடப்படுவதால் அந்நாள்களில் அன்னதானமும் ரத்து செய்யப்படும்.

திருப்பதியில் தண்ணீர் தட்டுப்பாட்டை முற்றிலும் தீர்க்க புதிய அணை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.

திருப்பதி தேவஸ்தானம் இந்து தர்மத்திற்கு கட்டுப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆனால் சிலர் அதன் நற்பெயரை குலைக்க சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருகின்றனர். அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருமலையில் தற்போது திருமஞ்சனம் மற்றும் மாடவீதி புறப்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்டு வரும் மலையப்ப சுவாமியின் சிலை தொடர் பயன்பாட்டால் சற்று சேதமடைந்துள்ளது. அதைப் பாதுகாக்க அர்ச்சகர்கள் அளித்த ஆலோசனைகள் அனைத்தும் தேவஸ்தானத்தின் ஆகம ஆலோசனைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்படும். இன்னும் 4 நாள்களுக்குள் நடக்கவுள்ள ஆகம ஆலோசனைக் குழு கூட்டத்தில் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும்.

ஏழுமலையான் பெயரில் செயல்பட்டு வரும் தேவஸ்தான அறக்கட்டளைகளுக்கு இந்த ஆண்டு 7 மாதங்களில் ரூ.213 கோடி பக்தர்கள் நன்கொடை அளித்துள்ளனர். உண்டியல் மூலம் ரூ.777 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அதேபோல் 803 கிலோ தங்கம், 3,852 கிலோ வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக அளித்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News