ஆன்மிகம்
சக்தி முனியப்பன்

திருமண தடை, தீராத பிரச்சனைகளை தீர்க்கும் ஞான செல்வ சக்தி முனியப்பன்

Published On 2020-11-13 06:32 GMT   |   Update On 2020-11-13 06:32 GMT
திருமண தடை, தீராத நோயால் அவதிப்படுபவர்கள், எதிரிகள் தொல்லை நீங்க, தொழில்வளம் பெருக, குழந்தை வரம் வேண்டி வருபவர்கள் என பலரும், ஞான செல்வ சக்தி முனியப்பனுக்கு எலுமிச்சை மாலை அணிவித்து ஆடு, கோழிகளை பலியிட்டு வழிபட்டுச் செல்கிறார்கள்.
சேலம் மாவட்டம் எருமாபாளையம் எம்.எஸ்.நகர் அருகே, பிரசித்திபெற்ற ஞான செல்வ சக்தி முனியப்பன் கோவில் உள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்தக் கோவிலில் ஞான செல்வ சக்தி முனியப்பன் மற்றும் கன்னிமார் தெய்வங்கள் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். இந்தக் கோவிலின் தலவிருட்சம் வேப்பமரம் ஆகும். தற்போது கோவில் அமைந்துள்ள பகுதி, முன்பு விவசாய பூமியாக இருந்தது. இந்தப் பகுதி மக்கள் விவசாயம் செழிக்கவும், கால்நடைகளுக்கு நோய் நொடிகள் பரவாமல் இருக்கவும் ஞான செல்வ சக்தி முனியப்பனை வழிபட்டு வந்துள்ளனர்.

காலப்போக்கில் இந்தக் கோவிலில் பூஜைகள் நடைபெறாமல் இருந்தது. தற்போது அந்தப் பகுதி மக்களின் முயற்சியால் ஞான செல்வ சக்தி முனியப்பனுக்கு பூஜைகள் நடைபெற்று வருகிறது. ஞான செல்வ சக்தி முனியப்பனை மனமுருகி வழிபடும் பக்தர்களுக்கு, குறைவற்ற செல்வமும், ஞானமும் கிடைக்கும் என்பது அந்தப் பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். மேலும் திருமணத் தடையால் அவதிப்படுபவர்கள், ஞான செல்வ சக்தி முனியப்பனை 7 வாரங்கள் தொடர்ந்து வழிபட்டு எலுமிச்சைப் பழத்தில் விளக்கு ஏற்றுகிறார்கள். இவ்வாறு செய்வதால் வழிபாடு செய்தவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. அதன்படி திருமணம் முடிந்தவர்கள், தம்பதியர்களாக வருகை தந்து, முனியப்பனை வணங்கி நேர்த்திக்கடன் செலுத்திச் செல்கிறார்கள்.

தீராத நோயால் அவதிப்படுபவர்கள், எதிரிகள் தொல்லை நீங்க, தொழில்வளம் பெருக, குழந்தை வரம் வேண்டி வருபவர்கள் என பலரும், ஞான செல்வ சக்தி முனியப்பனுக்கு எலுமிச்சை மாலை அணிவித்து ஆடு, கோழிகளை பலியிட்டு வழிபட்டுச் செல்கிறார்கள். மேலும் சாமிக்கு அரிவாள், கத்தி, சூலம், கண்மலர் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகிறார்கள். இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 3-வது புதன்கிழமை அன்று திருவிழா நடைபெறும். அன்றைய தினம் மூலவருக்கு பால், தேன், இளநீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெறும். மேலும் நீண்ட நெடுநாள் கோரிக்கை நிறைவேறிய பக்தர்கள், முனியப்பனுக்கு தங்களுடைய நேர்த்திக் கடனை செலுத்தும் விதமாக பொங்கல் வைப்பார்கள். இந்த விழாவில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சாமியை தரிசித்துச் செல்வார்கள்.
Tags:    

Similar News