செய்திகள்
சிங்கு எல்லையில் போராட்டம் நடத்தும் விவசாயிகள்

டெல்லி மைதானத்திற்கு செல்ல மறுப்பு... எல்லைகளில் தொடரும் விவசாயிகள் போராட்டம்

Published On 2020-11-29 05:41 GMT   |   Update On 2020-11-29 05:41 GMT
விவசாயிகள் போராட்டம் நடத்துவதற்கு ஒதுக்கப்பட்ட டெல்லி புராரி மைதானத்திற்கு பெரும்பாலான விவசாயிகள் செல்லாமல் எல்லையிலேயே போராட்டம் நடத்துகின்றனர்.
புதுடெல்லி:

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லிக்கு பேரணியாக சென்றவண்ணம் உள்ளனர். வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யக்கோரியும் லாரிகள், டிராக்டர்கள் போன்ற ஏராளமான வாகனங்களில் அவர்கள் டெல்லிக்கு புறப்பட்டனர்.

ஆனால் இந்த போராட்டத்திற்கு டெல்லி காவல்துறை முதலில் அனுமதி அளிக்கவில்லை. எல்லைகளில் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். தடையை மீறி டெல்லியை நோக்கி புறப்பட்ட விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் விரட்டியடித்தனர். 

நிலைமை தீவிரமடைந்த நிலையில், விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் டெல்லிக்குள் நுழைவதற்கு காவல்துறை அனுமதி அளித்தது. டெல்லி புராரி பகுதியில் உள்ள நிரங்கரி சமகம் மைதானத்தில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி விவசாயிகள் டெல்லி புராரி மைதானத்திற்கு சென்று போராட்டத்தை தொடங்கி உள்ளனர். தொடர்ந்து போராட்டக்களத்திற்கு விவசாயிகள் வந்தவண்ணம் உள்ளனர். அங்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதேசமயம், தலைநகர் டெல்லியின் எல்லை பகுதிகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் குவிந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். புராரி மைதானத்துக்கு செல்ல மறுத்து வரும் அவர்கள், எல்லை பகுதியில் நெடுஞ்சாலையில் இருந்துகொண்டே தங்கள் போராட்டத்தை தொடர்கின்றனர். புராரி மைதானத்திற்கு வந்தவர்களை விட எல்லைகளில் உள்ள விவசாயிகள் அதிக அளவில் உள்ளனர்.

குறிப்பாக சிங்கு, திக்ரி எல்லை பகுதியில் ஆயிரக்கணக்கான வாகனங்களில் வந்த விவசாயிகள் குவிந்துள்ளனர். ஜந்தர் மந்தர் பகுதியை தங்கள் போராட்டத்துக்கு ஒதுக்காமல், புராரி மைதானத்தை ஒதுக்கியதால் எல்லையிலேயே போராடுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

அண்டை மாநிலங்களில் இருந்து டெல்லிக்குள் நுழையும் பகுதிகளில் விவசாயிகள் குவிந்திருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் எல்லைகளில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News