செய்திகள்
ஓ.பன்னீர்செல்வம்

தமிழக அரசு ஊழியர்களுக்கும் தீபாவளி பரிசாக 14 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்

Published On 2021-10-22 06:46 GMT   |   Update On 2021-10-22 06:46 GMT
மத்திய அரசு வழங்கியது போல தமிழக அரசு ஊழியர்களுக்கும் தீபாவளி பரிசாக 14 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

2011 முதல் 2021 வரையிலான அ.தி.மு.க. ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி ரொக்கமாக வழங்கப்பட்டு வந்தது.

2021-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை தேர்தலுக்கு பின் தி.மு.க. ஆட்சி அமைந்ததில் இருந்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நிலைமை பரிதாபத்திற்குள்ளாகியது. ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 11 விழுக்காடு அகவிலைப்படியை மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 1.7.2021 முதல் அளித்தபோது, அதனை மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விரிவுபடுத்தாமல், 1.4.2022 முதல் வழங்கப்படும் என்று தி.மு.க. அரசு அறிவித்தது.

பின்னர், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் தொடர் வலியுறுத்தலை தொடர்ந்து மூன்று மாதங்கள் முன்னதாக, அதாவது 1.1.2022 முதல் வழங்கப்படும் என்று தி.மு.க. அரசு அறிவித்தது.

இந்த சூழ்நிலையில், தீபாவளி பரிசாக, மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 1.7.2021 முதல் 3 விழுக்காடு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கி உள்ளது. அதாவது 1.7.2021 முதல் 31 விழுக்காடு அகவிலைப்படியை மத்திய அரசு ஊழியர்கள் பெறப்போகிறார்கள்.

ஆனால் மாநில அரசு ஊழியர்கள் 17 விழுக்காடு அகவிலைப்படியை தான் பெற்று வருகிறார்கள். மத்திய அரசு ஊழியர்களுக்கும், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்குமான அகவிலைப்படி வித்தியாசம் 14 விழுக்காடு, இந்த 14 விழுக்காடு அகவிலைப்படியை தீபாவளி பரிசாக தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்பதே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

தேர்தலுக்கு முன், பழைய ஓய்வூதியத்திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்து விட்டு, தேர்தலுக்குப் பின், விலைவாசி உயர்வை ஓரளவு ஈடுகட்ட வழங்கப்படும் அகவிலைப்படியையே நிறுத்தி வைப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.

எனவே மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக அகவிலைப்படியை அளித்ததுபோல், மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான 14 விழுக்காடு அகவிலைப்படியை தீபாவளி பரிசாக உடனே வழங்க முதல்- அமைச்சர் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News