உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

ஆணாக மாறி தோழியை திருமணம் செய்த பெண்

Published On 2022-01-12 07:41 GMT   |   Update On 2022-01-12 07:41 GMT
திருநங்கைகள் பெருமாநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து இருதரப்பினரையும் போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
திருப்பூர்:

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் ரேவதி (வயது  21). இவர் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே உள்ள பொங்குபாளையம் ஊராட்சி காளம்பாளையத்தில் குடியிருந்து அப்பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.  

இந்தநிலையில் இவரது உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. இதையடுத்து மதுரையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற சென்றார். அப்போது மதுரை பழைய மீனாட்சிபுரத்தை சேர்ந்த நாகஜோதி (19) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் நெருங்கி பழகி வந்தனர்.  

இந்தநிலையில் ரேவதிக்கு ஆணாக மாறும் உணர்வு ஏற்பட்டதால் இதுபற்றி அவர் நாகஜோதியிடம் கூறியுள்ளார். அவர் ஒன்றும் கவலைப்படாதே என்று ஆறுதல் தெரிவித்துள்ளார். 

ஆனால் ரேவதியின் நடை உடை பாவனைகள் நாளடைவில் ஆண்போலவே மாறியது. இதனால் அதிர்ச்சியடைந்த நாகஜோதி, ரேவதியை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். 

அங்கு ஆலோசனை பெற்ற பின் டாக்டர் அறிவுறுத்தலின் பேரில் மாற்றம் ஏற்பட்ட ரேவதிக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் ரேவதி திருநம்பியாக மாறினார். இதையடுத்து அவர் தனது பெயரை மஜா என மாற்றிக்கொண்டார்.
 
மேலும் நாகஜோதியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். அவரும் சம்மதம் தெரிவிக்கவே, இருவரும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். ரேவதி திருநம்பியாக மாறியது குறித்தும், திருமணம் செய்தது குறித்தும் இருவரும் பெற்றோரிடம் தெரிவிக்க முடியாமல் தயக்கம் காட்டி வந்தனர்.  

மேலும் இருவரும் திருப்பூர் காளம்பாளையத்திற்கு வந்து வசித்து வந்துள்ளனர். இதனிடையே நாகஜோதியின் நிலைமையை அறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் காளம்பாளையத்திற்கு வந்து அவரை அழைத்துள்ளனர். ஆனால் அவர் செல்ல மறுத்துவிட்டார்.  

இதனிடையே நாகஜோதியின் தாய்க்கு உடல்நிலை பாதிக்கப்படவே, அவரது உறவினர்கள் காளம்பாளையத்திற்கு வந்து நாகஜோதியை அழைத்தனர். ஆனால் அவர் மீண்டும் செல்ல மறுத்துவிட்டார். இருப்பினும் வலுக்கட்டாயமாக அவரை அழைத்து செல்ல உறவினர்கள் முயன்றனர்.  

இதைத்தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த திருநங்கைகள் பெருமாநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து இரு தரப்பினரையும் போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் நாகஜோதியோ உறவினர்களுடன்  செல்லமாட்டேன் என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார். 

இதையடுத்து நாகஜோதியை தொந்தரவு செய்யக்கூடாது என்று உறவினர்களுக்கு போலீசார் அறிவுரை கூறி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். 

ஏற்கனவே கடந்த மாதம் இது போல் திருப்பூரில் ஆணாக மாறி கல்லூரி மாணவியை பெண் ஒருவர் திருமணம் செய்தார். தற்போது மேலும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
Tags:    

Similar News