செய்திகள்
கோப்புபடம்

கட்டிடம் இடிந்த சம்பவம் - சாளையூர் அரசுப் பள்ளியில் ஆய்வு நடத்த வலியுறுத்தல்

Published On 2021-10-26 05:42 GMT   |   Update On 2021-10-26 05:42 GMT
சாளையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடிந்து விழுந்த கட்டிடம், 20 ஆண்டுகளுக்கும் குறைவாகவே பயன்பாட்டில் இருந்தது.
உடுமலை:

உடுமலை ஒன்றியம் சாளையூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பல்வேறு திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட வகுப்பறை, சத்துணவுக்கூடம் உள்ளிட்ட கட்டிடங்கள் உள்ளன.

இந்நிலையில் சாளையூர் சுற்றுப்பகுதியில் சில நாட்களுக்கு முன் பலத்த மழை பெய்தது. பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கியிருந்த நிலையில், அங்கிருந்த சிறிய வகுப்பறை கட்டிடம் அடியோடு இடிந்து விழுந்தது.

பள்ளிக்கு மாணவர்கள் வருகை இல்லாத நிலையில் கட்டிடம் இடிந்தது குறித்து கிராம மக்கள், கல்வித்துறை அதிகாரிகளுக்கும், உடுமலை ஒன்றிய நிர்வாகத்துக்கும் தகவல் கொடுத்தனர். 

இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:

சாளையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடிந்து விழுந்த கட்டிடம், 20 ஆண்டுகளுக்கும் குறைவாகவே பயன்பாட்டில் இருந்தது. குறைவான ஆண்டுகளில் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கட்டிடம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி, கட்டுமான பணிகளின் தரம் கேள்விக்குறியாகியுள்ளது. பள்ளியில் மாணவர்களுக்கான வகுப்புகள் விரைவில் துவக்கப்பட உள்ள நிலையில் பிற கட்டிடங்களின் உறுதித்தன்மை குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து பெற்றோருடன் ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும் என்றனர். 
Tags:    

Similar News