செய்திகள்
வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா மூட் டைகளை காணலாம் (உள்படம்: கைது செய்யப்பட்ட மலையரசு).

வாடகைக்கு வீடு பிடித்து 587 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கல்- ஒருவர் கைது

Published On 2020-09-17 07:18 GMT   |   Update On 2020-09-17 07:18 GMT
மதுரையில் வாடகைக்கு வீடு பிடித்து 587 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
மதுரை:

மதுரை நகரில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸ் துணை கமிஷனர் சிவபிரசாத் மேற்பார்வையில் அனைத்து போலீஸ் நிலையங்களில் உள்ள போலீசார் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் கடந்த சில நாட்களாக நகரில் கஞ்சா மற்றும் புகையிலையை பதுக்கி விற்பவர்கள் பலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் மதுரை தெற்குவாசல் போலீசாருக்கு அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே போலீசார் தெற்குமாசி வீதி நவபத்கானா தெருவில் உள்ள வீடுகள், கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது ஒரு வீட்டில் மூட்டை, மூட்டையாக புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

பின்னர் போலீசார் அந்த வீட்டில் இருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில் அதே பகுதியை சேர்ந்த மலையரசு(வயது 39) என்பதும், அவர் அந்த வீட்டை வாடகைக்கு பிடித்து புகையிலை பொருட்களை மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அங்கிருந்த 56 மூட்டைகள் மற்றும் 7 அட்டை பெட்டிகளில் இருந்த 587 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக மலையரசுவை கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் விரைந்து செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த போலீசாரை போலீஸ் கமிஷனர் பாராட்டினார். இதேபோல் கடந்த மாதம் எஸ்.எஸ்.காலனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 56 மூட்டைகளில் இருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து 7 பேரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News