உள்ளூர் செய்திகள்
கைது

417 மூட்டை ரே‌ஷன் அரிசியை பதுக்கிய 5 பேர் கைது- அரிசி ஆலை உரிமையாளர் உள்பட 2 பேர் தலைமறைவு

Published On 2022-01-10 10:34 GMT   |   Update On 2022-01-10 10:34 GMT
417 மூட்டை ரே‌ஷன் அரிசியை பதுக்கிய வழக்கில் தலைமறைவாக உள்ள தனியார் அரிசி ஆலை உரிமையாளர், பவானியை சேர்ந்த ராஜேஷ் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஈரோடு:

பெருந்துறையில் ரே‌ஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு, அங்குள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஈரோடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வன் தலைமையில் போலீசார் பெருந்துறை பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு தனியார் அரிசி ஆலையில் மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அரிசி ஆலை உரிமையாளர் உள்பட 7 பேர் ரே‌ஷன் அரிசியை கடத்தி வந்து பதுக்கி வைத்திருந்ததும், இந்த அரிசியை வடமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து ரே‌ஷன் அரிசியை பதுக்கி வைத்ததாக சேலம் மாவட்டம் வாழப்பாடி அக்ரஹாரம் தெற்கு வீதியை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 32), தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பத்ரஹள்ளி பூச்சூரை சேர்ந்த பாலுவின் மகன் அஜித்குமார் (25), பென்னாகரம் செல்லம்பூண்டி தாசனூரை சேர்ந்த செல்வராஜ் (40), அதே பகுதியை சேர்ந்த சின்னதம்பி (40), பெருந்துறை அருகே வாவிக்கடை பிச்சாண்டம்பாளையம் கணபதிநகரை சேர்ந்த சென்னியப்பன் (39) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 417 மூட்டைகளில் இருந்த 20 ஆயிரத்து 850 கிலோ ரே‌ஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான 5 பேரும் ஈரோடு 3-ம் எண் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள தனியார் அரிசி ஆலை உரிமையாளர், பவானியை சேர்ந்த ராஜேஷ் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News