செய்திகள்
வாக்குப்பதிவு எந்திரம்

சென்னையில் கூடுதலாக 2,330 வாக்குசாவடிகள் அமைப்பு

Published On 2021-01-11 09:40 GMT   |   Update On 2021-01-11 09:40 GMT
சென்னையில் கடந்த தேர்தலின்போது 16 சட்டசபை தொகுதிகளிலும் 3,754 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த தடவை 16 தொகுதிகளிலும் கூடுதலாக 2,330 வாக்குச்சாவடிகள் அமைக்க கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழக சட்டசபை தேர்தலை சுமூகமாக நடத்துவதற்காக தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை தீவிரப்படுத்த தொடங்கி உள்ளது. இது தொடர்பாக தமிழக தேர்தல் அதிகாரிக்கு அறிவுறுத்தல் கடிதம் ஒன்றை தலைமை தேர்தல் ஆணையம் அனுப்பி உள்ளது.

இந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படும் அதிகாரிகள் தங்களது சொந்த மாவட்டத்தில் பணியில் இருக்கும் வகையில் பணியாற்ற அனுமதிக்க கூடாது. அதுமட்டுமின்றி கடந்த 3 ஆண்டுகளாக ஒரே மாவட்டத்தில் பணிபுரிந்தவர்களை அதே மாவட்டத்தில் தேர்தல் பணியாற்ற அனுமதிக்க கூடாது.

மேலும் அடுத்த 6 மாதங்களில் ஓய்வு பெற உள்ள அதிகாரிகளுக்கு தேர்தல் தொடர்பான எந்த முக்கிய பணிகளையும் வழங்க கூடாது. கடந்த தேர்தல்களின்போது ஒழுங்கீனமாக நடந்துகொண்டு தண்டிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு மீண்டும் தேர்தல் பணி வழங்க கூடாது.

இவ்வாறு அந்த கடித்தில் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் பணிக்கு தமிழ்நாட்டில் சுமார் 4 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்களுக்கு 3 கட்ட பயிற்சிகள் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பரவல் காரணமாக 1,500 பேருக்கு ஒரு வாக்குசாவடி என்ற நிலையை மாற்றி 1000 பேருக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக தமிழ்நாடு முழுவதும் வாக்குசாவடிகளின் எண்ணிக்கை கணிசமான அளவுக்கு உயருகிறது. புதிய வாக்குசாவடிகளை எந்தெந்த இடங்களில் அமைப்பது என்பதற்கான ஆய்வு பணிகளை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். விரைவில் புதிய வாக்குச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டு அந்த இடங்களில் ஏற்பாடுகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் கடந்த தேர்தலின்போது 16 சட்டசபை தொகுதிகளிலும் 3,754 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த தடவை 16 தொகுதிகளிலும் கூடுதலாக 2,330 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட வேண்டும் என்று கணக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த 2,330 புதிய வாக்குச்சாவடிகளை எங்கெங்கு அமைப்பது என்பது பற்றி ஆய்வு செய்யுமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் அரசு கட்டிடங்கள், பள்ளிகளில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. தற்போது கூடுதல் இடங்களை அடையாளம் காண்பது மாநகராட்சி அதிகாரிகளுக்கு கடும் சவாலாக மாறி உள்ளது.

குறிப்பாக வேளச்சேரி தொகுதியில் மட்டும் கூடுதலாக 203 புதிய வாக்குச்சாவடிகளை உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக அதிகாரிகள் அந்தந்த மண்டல பகுதிகளில் முகாமிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News