செய்திகள்
அனந்த்குமார் ஹெக்டே

மத்திய அரசின் ரூ.40 ஆயிரம் கோடி நிதியை முடக்க பட்னாவிஸ் பதவியேற்றார் - பா.ஜனதா எம்பி சர்ச்சை பேச்சு

Published On 2019-12-03 07:14 GMT   |   Update On 2019-12-03 07:17 GMT
பெரும்பான்மை இல்லை என்று தெரிந்தும் மத்திய அரசின் ரூ.40 ஆயிரம் கோடி நிதியை முடக்கவே தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றதாக பாஜக எம்பி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூர்:

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை இல்லாத போதும் பா.ஜனதாவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் 2-வது முறையாக கடந்த 23-ந் தேதி முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.

தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித்பவார் துணை முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார்.

மெஜாரிட்டியை நிரூபிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட நிலையில் இருவரும் கடந்த 26-ந் தேதி பதவி விலகினார்கள்.

கர்நாடக பா.ஜனதா எம்.பி.யும், முன்னாள் மத்திய மந்திரியுமான அனந்த்குமார் ஹெக்டே எல்லப்பூரில் நடந்த இடைத்தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக பேசியதாவது:-

மகாராஷ்டிராத்தில் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை இல்லை என்று தெரிந்தும் தேவேந்திர பட்னாவிஸ் 2-வது முறையாக பதவி ஏற்று 80 மணி நேரத்தில் பதவி விலகினார். இந்த நாடகத்தை ஏன் நடத்தினோம் என்று தெரியுமா?

மகாராஷ்டிரா முதல்வர் பொறுப்பில் மத்திய அரசு நிதி ரூ.40 ஆயிரம் கோடி குவிந்து கிடக்கிறது. சிவசேனா-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி வந்தால் நிச்சயமாக இந்த ரூ40 ஆயிரம் கோடி மாநில மேம்பாட்டு திட்டங்களுக்கு போகாது. அது பல்வேறு வி‌ஷயங்களுக்கும், சுயநல லாபத்துக்கும் பயன்படுத்தப்படும்.

இதை தடுப்பதற்காகவும், அந்த நிதியை திருப்பி அனுப்புவதற்காகவும் பா.ஜனதா நடத்திய நாடகமே பட்னாவிஸ் பதவி ஏற்பு ஆகும்.



அவர் பதவி ஏற்ற 15 மணி நேரத்துக்குள் சில நடவடிக்கைகளை எடுத்து அந்த பணத்தை பாதுகாத்து விட்டார். அந்த பணம் அனைத்தும் மத்திய அரசுக்கு திரும்ப கொடுக்கப்பட்டுவிட்டது.

இவ்வாறு அனந்தகுமார் ஹெக்டே பேசினார். அவரது இந்த பேச்சு மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

தன் மீதான குற்றச்சாட்டை தேவேந்திர பட்னாவிஸ் மறுத்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இந்த குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. புல்லட் ரெயில் திட்டத்தை மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனமே செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்துக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்துவது மட்டுமே மாநில அரசின் பணியாகும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு எந்த நிதியும் கோரவில்லை. மாநில அரசும், மத்திய அரசுக்கு எந்த நிதியையும் திருப்பி அனுப்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அனந்தகுமார் ஹெக்டே கருத்து தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுர்ஜேவாலா கூறியதாவது:-

நாட்டின் கூட்டாட்சி கொள்கையை பா.ஜனதா நசுக்க பார்க்கிறதா? மாநில விவசாயிகள், மக்களின் நலனுக்காக பயன்பட வேண்டிய ரூ.40 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசுக்கு பட்னாவிஸ் திருப்பி அனுப்பினாரா? என்பது குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப்மாலிக் கூறும்போது, “இது மாநிலத்துக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். ஹெக்டே கூறியது உண்மையாக இருந்தால் பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும்” என்றார்.

சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவத் கூறும்போது, “மாநில மக்களுக்கு பட்னாவிஸ் துரோகம் செய்து விட்டார்” என்றார்.

இதற்கிடையே சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பா.ஜனதா எம்.பி. அனந்தகுமார் ஹெக்டே மீது கட்சி மேலிடம் அதிருப்தியுடன் உள்ளதாக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

ஹெக்டேயின் கருத்து முற்றிலும் அவசியமற்றது என்றும், இந்த அதிருப்தி குறித்து அவரிடம் தெரிவிக்கப்படும் என்றும் அந்த தலைவர் கூறினார்.
Tags:    

Similar News