செய்திகள்
என்ஜினீயருக்கு 7 ஆண்டு சிறை

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் மனைவி தற்கொலை: என்ஜினீயருக்கு 7 ஆண்டு சிறை

Published On 2021-10-14 09:35 GMT   |   Update On 2021-10-14 09:35 GMT
வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் என்ஜினீயருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
கடலூர்:

நெல்லிக்குப்பம் மேல்பாதி அருந்ததியர் நகரை சேர்ந்தவர் குப்பாராவ் மகன் வீரக்குமார் (வயது 34). என்ஜினீயர். இவரும் பண்ருட்டி மேல்கவரப்பட்டு இமயவர்மன் மகள் இந்துமதி (26) என்பவரும் கடந்த 2014-ம் ஆண்டு பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்துமதி தடகள வீராங்கனை மற்றும் முதுகலை பட்டதாரியாக இருந்தார். திருமணத்திற்கு பிறகு இருவரும் கடலூர் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை கன்னிக்கோவில் தெருவில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தனிக்குடித்தனம் நடத்தினர். இதற்கிடையில் இந்துமதி 5 மாத கர்ப்பமானார். இதை அறிந்ததும் இந்துமதி பெற்றோர் தம்பதியிடம் பேச ஆரம்பித்தனர். பின்னர் வளைகாப்பு நிகழ்ச்சியும் நடத்தினர். அப்போது இந்துமதி பெற்றோர், வீட்டுக்கு தேவையான சீர்வரிசைப்பொருட்கள், நகை ஆகியவற்றையும் வழங்கினர்.

அதையடுத்து அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. சில ஆண்டுகளுக்கு பிறகு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதன்பிறகு வீரக்குமார் மனைவியிடம் தனியாக காய்கறி கடை வைக்க ரூ.3 லட்சம் கேட்டு தொந்தரவு செய்ய ஆரம்பித்தார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதேபோல் கடந்த 31.7.2018 அன்று வீரக்குமார் மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினார். இதை அன்று இரவு இந்துமதி தனது தாய் ஜெயபாரதியிடம் செல்போனில் தெரிவித்துவிட்டு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி ஜெயபாரதி கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு வீரக்குமாரை கைது செய்தனர்.

இந்த வழக்கு கடலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நீதிபதி பாலகிருஷ்ணன் நேற்று தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், இவ்வழக்கில் வீரக்குமார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.60 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செல்வப்பிரியா ஆஜரானார்.
Tags:    

Similar News