தொழில்நுட்பம்

ஆப் ஸ்டோர் மற்றும் புதிய வசதிகளுடன் வாட்ச் ஒ.எஸ். 6 அறிமுகம்

Published On 2019-06-04 02:03 GMT   |   Update On 2019-06-04 02:03 GMT
ஆப்பிள் நிறுவனம் தனது புதிய வாட்ச் ஒ.எஸ். 6 இயங்குதளத்தை 2019 டெவலப்பர்கள் நிகழ்வில் அறிமுகம் செய்தது.



ஆப்பிள் நிறுவனத்தின் வாட்ச் ஒ.எஸ். 6 நேற்று (ஜூன் 3) துவங்கிய 2019 டெவலப்பர்கள் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய வாட்ச் ஒ.எஸ். தளத்தில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படாமல், புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. புதிய இயங்குதளத்தின் மூலம் ஆப்பிள் வாட்ச் சாதனத்தை ஐபோனுக்கான கூடுதல் உபகரணமாக இல்லாமல், தனித்துவம் வாய்ந்த சாதனமாக மாற்ற ஆப்பிள் முடிவு செய்திருக்கிறது.

வாட்ச் ஒ.எஸ். 6 தளத்தில் புதிய வாட்ச் ஃபேஸ்கள், உடல் ஆரோக்கியம் சார்ந்த புதிய அம்சங்கள், ஆன்-டிவைஸ் ஆப் ஸ்டோர் மற்றும் பல்வேறு வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆப்பிள் வாட்ச் ஒ.எஸ். 6 தளம் டெவலப்பர்களுக்கு மட்டும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், வரும் வாரங்களில் அனைவருக்கும் வழங்கப்படுகிறது.



புதிய ஆப்பிள் வாட்ச் இயங்குதளத்தில் பல்வேறு வாட்ச் ஃபேஸ் (தீம்கள்) வழங்கப்படுகின்றன. இவை புதிய வடிவமைப்புகளை கொண்டிருப்பதோடு முந்தைய ஃபேஸ்களில் இருந்ததை விட அதிகளவு விவரங்களை வழங்குகின்றன. இத்துடன் கால்குலேட்டர், வாய்ஸ் மெயில் மற்றும் ஆடியோபுக் போன்ற புதிய செயலிகளும் ஆப்பிள் வாட்ச் ஒ.எஸ். 6 தளத்தில் வழங்கப்படுகின்றன.

வாட்ச் ஒ.எஸ். 6 தளத்தில் செயலிகள் தனித்துவமாக இயங்கும் என்றும் இதற்கென ஐபோனுடன் இணைக்கப்பட்ட செயலி எதுவும் தேவைப்படாது என ஆப்பிள் அறிவித்துள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் ஆப்பிள் வாட்ச் சாதனத்தை பயன்படுத்துவோருக்கு புதிய அனுபவங்களை வழங்க முடியும் என ஆப்பிள் நம்புகிறது.



இவற்றுடன் வாட்ச் ஒ.எஸ். 6 தளத்தில் ஆன்-டிவைஸ் ஆப் ஸ்டோர் வழங்கப்படுகிறது. புதிய இயங்குதளத்தில் ஆப் ஸ்டோர் வழங்கப்படுவதால், பயனர்கள் ஆப்பிள் வாட்ச் சாதனத்தில் இருந்தே செயலிகளை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். செயலிகளை மிக எளிமையாக கண்டறிய ஆப்பிள் வாட்ச்-இல் வழங்கப்படும் ஆப் ஸ்டோர் செயலிகளை மிக நேர்த்தியாக பட்டியலிடும். ஆப்பிள் வாட்ச் சாதனத்தில் மென்பொருள் அப்டேட்களை ஐபோன் உதவியின்றி இன்ஸ்டால் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது.

வாட்ச் ஒ.எஸ். 6 தளம் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 1, ஐபோன் 6எஸ் மற்றும் ஐ.ஒ.எஸ். 13 இயங்குதளம் கொண்ட சாதனங்களுடன் இணைந்து வேலை செய்யும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News