லைஃப்ஸ்டைல்
ஹேர் டை போட்டதால் வந்த அலர்ஜி என்பதை உணர்த்தும் அறிகுறியும், அதற்கான தீர்வும்...

ஹேர் டை போட்டதால் வந்த அலர்ஜி என்பதை உணர்த்தும் அறிகுறியும், அதற்கான தீர்வும்...

Published On 2021-03-05 07:23 GMT   |   Update On 2021-03-05 07:23 GMT
எப்படியாவது முடி கருப்பாக இருந்தால் போதும் என்று வித விதமான ஹேர் டை பயன்படுத்தும் போது அது தலைமுடியில் அபாயகரமான விளைவையும் ஒவ்வாமை எதிர்வினையையும் உண்டு செய்யும்.
தற்போது ஹேர் டை பயன்பாடு வழக்கமாகிவிட்டது. ஆனால் முதன் முறை பயன்படுத்தும் போது எந்த விதமான ஹேர் டையாக இருந்தாலும் அதை முதலில் சருமத்தில் பரிசோதித்த பிறகே பயன்படுத்த வேண்டும். ஆனால் எப்படியாவது முடி கருப்பாக இருந்தால் போதும் என்று ஒவ்வொருமுறை ஒவ்வொரு விதமான ஹேர் டை பயன்படுத்தும் போது அது தலைமுடியில் அபாயகரமான விளைவையும் ஒவ்வாமை எதிர்வினையையும் உண்டு செய்யும். இந்த அலர்ஜிக்கான அறிகுறி மற்றும் தீர்வு குறித்து இப்போது பார்க்கலாம்.

அறிகுறிகளின் தீவிரம் ஒவ்வொருவரது தோல் ஒவ்வாமைக்கேற்ப மாறுபடும். ஹேர் டை பயன்பாட்டுக்கு பிறகு 48 மணி நேரங்களில் அவை ஒவ்வாமை அறிகுறிகளை உண்டாக்கிவிடும். உடலில் சிவப்பான தடிப்புகள், உச்சந்தலை மற்றும் கழுத்தில் ஒருவித நமைச்சல், முகம் மற்றும் கழுத்துப்பகுதியில் வீக்கம், கொப்புளங்கள், கண் இமைகள் மற்றும் உதடுகளில் அழற்சி, கால்கள் கைகளிலும் வீக்கம் போன்றவை உண்டாகலாம்.

ஹேர்டை பயன்பாட்டுக்கு பிறகு தலைமுடியை ஷாம்பு கொண்டு அலசுவதன் மூலம் ஓரளவு குறைக்கலாம். சருமத்தில் மாய்சுரைசர் மற்றூம் க்ரீம் வகைகள் சருமத்தின் வீக்கத்தை குறைக்க உதவும். ஆனால் வெகு அரிதான சமயங்களில் கடுமையான எதிர்வினைகளை உருவாக்கலாம்.

அது தொண்டை வீக்கம், தோல் அலர்ஜி, சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்றவற்றையும் உண்டு செய்யலாம். இயன்றவரை எச்சரிக்கையாக பயன்படுத்துங்கள். உங்களுக்கு அலர்ஜி பிரச்சனைக்கான அறிகுறி இலேசாக இருந்தால் இந்த கைவைத்தியம் நிச்சயம் உதவும்.

இரவு தூங்குவதற்கு முன்பு உச்சந்தலையில் தேங்காய் எண்ணெயை ( சுத்தமானதாக இருக்கட்டும்) தடவி உச்சந்தலை முழுக்க விரல்களால் இலேசாக மசாஜ் செய்யுங்கள். பிறகு கூந்தலை அப்படியே விட்டு மறுநாள் காலை ஷாம்பு கொண்டு அலசி எடுங்கள். இதை வாரத்தில் இரண்டு நாட்கள் வரை செய்துவரலாம்.

தேங்காய் எண்ணெய் தோல் எரிச்சலுக்கு தீர்வாக பயன்படுத்தப்படுகிறது. இது அழற்சி மற்றும் வலி நிவாரணி பண்புகளை கொண்டுள்ள இயற்கையான பொருள். இது ஹேர் டை ஒவ்வாமையை உருவாக்கும் வீக்கம், சிவத்தல் மற்றும் வலியை குறைக்க உதவும்.

4 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயை இலேசாக சூடு செய்து உச்சந்தலை முழுக்க தடவி விடுங்கள். குறிப்பாக தலையில் பாதிக்கப்பட்ட இடங்கள் முழுக்க தடவி இரவு முழுவதும் தலையில் ஊறவிட்டு மறுநாள் ஷாம்பு கொண்டு அலசி விடுங்கள்.

இரவு தேய்க்க சிரமமாக இருந்தால் தலை குளியலுக்கு ஒரு மணி நேரம் முன்பு தடவி ஊறவிடலாம். தலைக்கு குளிக்கும் போதெல்லாம் இதை செய்யலாம்.

ஆலிவ் எண்ணெய் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பிற பினோலிக் கலவைகள் நிறைந்துள்ளது. இந்த கலவைகள் அழற்சி எதிர்ப்பு பண்புகளை வெளிப்படுத்துகிறது. இது ஹேர் டை ஒவ்வாமை அறிகுறிகளை போக்க கூடும்.

4 டீஸ்பூன் நல்லெண்ணெயை இலேசாக சூடேற்றி உச்சந்தலையில் தலைப்பகுதியில் தடிப்பு ஏற்பட்ட இடங்களில் தடவி இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் தலையை ஷாம்பு கொண்டு அலசி எடுக்கவும். இதுவும் ஆலிவ் எண்ணெய் போன்று இரண்டு மணி நேரம் வரை தலையில் ஊறினால் போதுமானது.

நல்லெண்ணெயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சிவப்பு மற்றும் தடிப்பு அரிப்பையும் போக்கும். சரும வீக்கத்தை குறைத்து சருமத்தை சமநிலைப்படுத்தும். ஹேர் டை ஒவ்வாமைக்கு இவை பெரிதும் உதவும்.

மேற்கண்டவைகள் உங்கள் ஹேர் டை அலர்ஜியை போக்க கூடியவை என்றாலும் முதல் முறை நீங்கள் பயன்படுத்தும் போது சரும பராமரிப்பு மருத்துவர் அல்லது கூந்தல் நிபுணரை சந்தித்து உங்களுக்கு ஏற்ற ஹேர்டையை தேர்வு செய்யலாம். இதனால் ஹேர்டையை பரிசோதனைக்கு பிறகு பயன்படுத்துவதன் மூலம் அலர்ஜியை தவிர்க்க முடியும்.
Tags:    

Similar News