செய்திகள்
அரவிந்த் கெஜ்ரிவால்

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வி: அரவிந்த் கெஜ்ரிவால்

Published On 2021-05-14 17:32 GMT   |   Update On 2021-05-14 17:32 GMT
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியோர் வரை கொரோனா வைரஸ் என்ற அரக்கன் பிடியில் மாட்டிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. சிறு குழந்தைகளின் பெற்றோர்களின் உயிரைக்குடிக்கும் மோசமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

இதனால் அக்குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு பெற்றோரை இழக்கும் குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும். இலவசமாக கல்வி அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்பு நாடு முழுவதும் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து சத்தீஸ்கர் அரசும் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வியும் நிதியுதவியும் வழங்கப்படும் என்று அறிவித்தது.

இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கொரோனாவால் பெற்றோர்களை/ பாதுகாவலர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு சார்பில் இலவசக் கல்வி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘‘கொரோனா தொற்றால் நிறையக் குழந்தைகள் பெற்றோரை இழந்திருக்கின்றனர். அவர்களின் வலியை என்னால் உணர்ந்துகொள்ள முடிகிறது. கவலைப்பட வேண்டாம். அவர்களின் கல்வி தடைப்பட நாங்கள் விடமாட்டோம்’’ என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News