செய்திகள்
நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்துள்ளதை படத்தில் காணலாம்.

அரியராவி நேரடி கொள்முதல் நிலையத்தில் 300 மூட்டை நெல் மழையில் நனைந்து முளைத்தது

Published On 2021-10-14 09:02 GMT   |   Update On 2021-10-14 09:02 GMT
அரியராவி நேரடி கொள்முதல் நிலையத்தில் பாதுகாப்பின்றி வைக்கப்பட்டிருந்த 300 மூட்டை நெல் மழையில் நனைந்து முளைத்தது. அதிகாரிகள் அலட்சியம் காரணமாக நெல்முட்டைகள் மழையில் நனைந்துள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பெண்ணாடம்:

பெண்ணாடம் அருகே அரியராவி கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த 2 மாதத்திற்கு முன்பு அமைக்கப்பட்டது. இங்கு அரியராவி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், தங்களது விளைநிலங்களில் அறுவடை செய்த நெல்லை, கொண்டு வந்து விற்பனை செய்து விட்டு செல்கின்றனர்.

அந்த வகையில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் அரசு சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விவசாயிகளிடம் இருந்து சுமார் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டது.

பின்னர் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்திலேயே அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதில் பெரும்பாலான மூட்டைகள் தார்பாய் போட்டு மூடாமல், திறந்த வெளியிலேயே வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இருப்பினும், அரியராவி நேரடி கொள்முதல் நிலையத்தில் இருந்த நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் அங்கிருந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணானது. இதற்கிடையே தற்போது மூட்டைகளில் இருந்த நெல் அனைத்தும் முளைக்க தொடங்கி உள்ளது. இதனால் அந்த நெல் மூட்டைகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மூட்டைகளில் இருந்தே நெல் முளைத்து வீணானதை கண்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், நாங்கள் 3 மாதம் இரவு-பகலாக கஷ்டப்பட்டு விளைவித்து அறுவடை செய்த நெல் அதிகாரிகள் அலட்சியம் காரணமாக தங்கள் கண் முன்னே முளைத்து வீணாகி வருவது வேதனையாக உள்ளது. அதனால் இனியாவது விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News