செய்திகள்
வழக்கு பதிவு

நாகர்கோவிலில் விவசாயிகளுக்கு ஆதரவாக பேரணி- பொதுக்கூட்டம் நடத்திய 570 பேர் மீது வழக்கு

Published On 2021-01-27 09:50 GMT   |   Update On 2021-01-27 09:50 GMT
நாகர்கோவிலில் விவசாயிகளுக்கு ஆதரவாக பேரணி- பொதுக்கூட்டம் நடத்திய 570 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

நாகர்கோவில்:

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி பல்வேறு கட்சியினர் மற்றும் விவசாய அமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், தொழிலாளர்களுக்கு எதிரான சட்ட திருத்தங்களை கைவிட வேண்டும், மின்சார திருத்த சட்டம் 2020-ஐ வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாகர்கோவிலில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று மாலை பேரணி- பொதுக்கூட்டம் நடந்தது.

வடசேரி சந்திப்பில் இருந்து தொடங்கிய பேரணி அண்ணா விளையாட்டு மைதானம் முன்பு முடிந்தது. பின்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் செல்லசாமி தலைமை தாங்கினார்.

இந்த பேரணி- பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட தலைவர் வக்கீல் ராபட் புரூஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கிடையாது. அனுமதியின்றி தொழிற் சங்கத்தினர் பேரணி- பொதுக் கூட்டம் நடத்தியதால் அதில் கலந்து கொண்டவர்கள் மீது வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மொத்தம் 400 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இதே போல் நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் அனுமதியின்றி ஊர்வலம் நடத்திய 170 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News