செய்திகள்
கர்நாடகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை

கர்நாடகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை

Published On 2020-12-03 03:01 GMT   |   Update On 2020-12-03 03:01 GMT
கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை ஜனவரியில் தொடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அரசுக்கு தொழில்நுட்ப ஆலோசனை குழு பரிந்துரை செய்துள்ளது.
பெங்களூரு :

கர்நாடக கெரோனா தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் கூட்டம் கடந்த நவம்பர் மாதம் 24-ந் தேதி பெங்களூருவில் நடைபெற்றது. இதில் கொரோனா தடுப்பு குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கர்நாடக அரசுக்கு அந்த குழு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை வழங்கியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை அடுத்த ஆண்டு (2021) ஜனவரி-பிப்ரவரி மாதத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளது. அதனால் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருத்துவ கட்டமைப்பு வசதிகளை ஜனவரி முதல் வாரத்திற்குள் தயார்படுத்தி கொள்ள வேண்டும். அதாவது படுக்கை, செயற்கை சுவாச கருவிகள் போன்ற வசதிகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். வருகிற 26-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை அனைத்து வகையான புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்க வேண்டும்.

இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த வேண்டும். தொற்று நோய் பிரிவு நிபுணர்கள், கொரோனா 2-வது அலையை கண்டறிய கொரோனா போர் அலுவலகத்திற்கு உதவி புரிவார்கள். சுகாதாரத்துறை கமிஷனருக்கு தேவையான எச்சரிக்கை வழங்கப்படும். தற்போது தினசரி 1.25 லட்சம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பரிசோதனை அளவை வருகிற பிப்ரவரி மாதம் வரை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இதில் 1 லட்சம் பரிசோதனைகள் ஆர்.டி.பி.சி.ஆர்., 25 ஆயிரம் ஆன்டிஜென் முறையில் பரிசோதனை செய்ய வேண்டும்.

சிறப்பான சேவை வழங்கும் நோக்கத்தில் புகழ் பெற்ற தொண்டு நிறுவனங்கள் மூலம் கொரோனா கண்காணிப்பு மையங்களை அரசு-தனியார் பங்களிப்பில் திறந்து நல்ல முறையில் நிர்வகிக்க வேண்டும். ஜனவரி மாதம் முதலில் 10-ம் வகுப்பு, பி.யூ.கல்லூரிகளையும், அதன் பிறகு 9, 11-ம் வகுப்புகளையும் செயல்பட அனுமதிக்கலாம். திருவிழா, மத விழாக்கள், கலாசார நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். திருமணத்தில் 100 பேர், அரசியல் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் 200 பேர், துக்க நிகழ்ச்சிகளில் 50 பேர், இறுதிச் சடங்கில் 20 பேர் வரை மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்க வேண்டும்.

பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். மார்க்கெட்டுகள், பஸ் நிறுத்தங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் முக்கியமான சர்க்கிள்களில் பொதுமக்களை கண்காணித்து அபராதம் வசூலிக்க அதிக எண்ணிக்கையில் மார்ஷல்கள் மற்றும் போலீசாரை நியமிக்க வேண்டும். மத்தியபிரதேசத்தல் அமலில் உள்ளது போல், முகக்கவசம் அணியாதவர்களுக்கு சில மணி நேரம் சிறை தண்டனையும் விதிக்கும் கடுமையான நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா முதல் அலை ஓய்ந்து 3-4 மாதங்களுக்கு பிறகு 2-வது அலை தொடங்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு, குளிர்காலம், மக்கள் அதிகளவில் நடமாட்டம் போன்ற காரணங்களால் கொரோனா வைரஸ் பரவலின் 2-வது அலை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News