செய்திகள்
மழை

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை மீண்டும் அச்சுறுத்தும் மழை

Published On 2021-01-17 07:20 GMT   |   Update On 2021-01-17 07:20 GMT
கொடைக்கானலில் 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் மழை அச்சுறுத்தி வருகிறது.

கொடைக்கானல்:

கொடைக்கானலில் 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் மழை அச்சுறுத்தி வருகிறது.

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. காணும் பொங்கலையொட்டி நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

2 நாட்களாக மழைப் பொழிவு நின்ற நிலையில் மோயர்பாய்ண்ட், குணாகுகை, கோக்கர்ஸ் வாக், பைன் பாரஸ்ட், தூண்பாறை உள்ளிட்ட சுற்றுலா இடங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பகல் பொழுதில் இதமான சீதோசனம் நிலவியதால் உற்சாகமாக கொடைக்கானல் நகர் பகுதியில் உலா வந்தனர். நட்சத்திர ஏரியில் ஆனந்தமாக படகு சவாரி செய்தும் ஏரியை சுற்றி குதிரை மற்றும் சைக்கிள் சவாரி செய்து மகிழ்ந்தனர். நேற்று இரவு சாரலாக மீண்டும் மழை தொடங்கியது. இன்று காலை வரை நீடித்ததால் சுற்றுலா பயணிகள் அறைகளிலேயே தங்கி உள்ளனர். தொடர் விடுமுறையை கொண்டாட வரும் பொதுமக்களை பருவம் தவறிய மழை அச்சுறுத்தி வருகிறது.

கொடைக்கானல் நகருக்கு குடிநீர் ஆதாரமாக மனோரத் தினம் சோலை அணை மற்றும் அப்சர்வேட்டரி நகராட்சி நீர்தேக்கம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது அணைகள் நிரம்பி உள்ளதால் 4 நாட்களுக்கு ஒருமுறை வினியோகம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதனால் கோடைகாலத் திலும் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர் மழையால் வெள்ளி நீர்வீழ்ச்சி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிடட்ட மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

வெள்ளி நீர்வீழ்ச்சி முன்பு ஆர்வமாக செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பெரும்பாலான சுற்றுலா பயணிகள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியின்றியும் சுற்றி வருகின்றனர். சுகாதாரத் துறையினர் இவர்களை கண்காணித்து அறிவுரை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். * * * வெள்ளி நீர்வீழ்ச்சி முன் உற்சாகமாக செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகள்.

Tags:    

Similar News