செய்திகள்
சசிகலா காரில் அதிமுக கொடி

சசிகலா காரில் இருந்து அதிமுக கொடி அகற்றப்படும்- போலீசார் தகவல்

Published On 2021-02-08 04:23 GMT   |   Update On 2021-02-08 05:49 GMT
சசிகலா காரில் இருந்து அதிமுக கொடியை அகற்ற அவருக்கு சிறிது நேரம் அவகாசம் வழங்கப்படும் என்று தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.
ஓசூர்:

பெங்களூரு சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து, கடந்த மாதம் 27-ந்தேதி சசிகலா விடுதலை ஆனார். அந்தநேரம் கொரோனா பாதிப்பு காரணமாக, அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சசிகலாவிடம், சிறைத்துறை நிர்வாகம் சார்பில் நேரடியாக அதிகாரிகள் சென்று விடுதலை செய்யப்பட்டதற்கான சான்றிதழை வழங்கினர்.

இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா, கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்தார். இதையடுத்து கடந்த மாதம் 31-ந்தேதி, அவர் ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்' ஆனார். ஆனாலும் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற டாக்டர்கள் அறிவுரையின்படி, பெங்களூருவில் உள்ள ஒரு வீட்டில் சசிகலா தங்கி ஓய்வு எடுத்தார்.

இந்தநிலையில் பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்திய காரில் சசிகலா இன்று தமிழகம் புறப்பட்டார்.

சென்னை புறப்படும்போது பெங்களூவில் ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி சசிகலா, டிடிவி தினகரன் மரியாதை செலுத்தினர்.

அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என்று காவல்துறை அறிவுறுத்திய நிலையில் காரில் மீண்டும் அதிகமுக கொடியுடன் தமிழகம் புறப்பட்டார் சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து விடுதலை ஆன இளவரசியும் காரில் சென்னை திரும்புகிறார்.

சென்னை வரும் சசிகலாவுக்கு தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் இருந்து சென்னை இல்லம் வரை சாலையின் இருமருங்கிலும் அமமுகவினர் திரண்டு நின்று வரவேற்பு அளிக்க உள்ளனர்.

இந்நிலையில் காரில் இருந்து அதிமுக கொடியை அகற்ற சசிகலாவுக்கு சிறிது நேரம் அவகாசம் வழங்கப்படும் என்று தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.

தமிழக எல்லையான ஓசூர் ஜூஜூவாடியில் அதிமுக கொடியை அகற்ற சசிகலாவுக்கு நோட்டீஸ் தரப்படும். அவகாசம் வழங்கிய பிறகும் காரில் இருந்து  கொடியை அகற்றாவிடில் அடுத்த வரவேற்பு இடத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.

முத்துமாரியம்மன் கோவில் அல்லது ஓசூர் பேருந்து நிலையம் அருகில் சகிகலா காரில் அதிமுக கொடி அகற்றப்படும்.

இவ்வாறு காவல் துறை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News