தமிழ்நாடு
ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளையை மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்ற காட்சியை காணலாம்

கூத்தைப்பாரில் ஜல்லிக்கட்டு களத்தில் நின்று விளையாடி மாடுபிடி வீரர்களுக்கு போக்கு காட்டிய காளைகள்

Published On 2022-01-21 10:10 GMT   |   Update On 2022-01-21 10:10 GMT
கூத்தைப்பாரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட ஒரு சில காளைகள் களத்தில் நின்று மாடுபிடி வீரர்களுக்கு போக்கு காட்டின.
திருவெறும்பூர்:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் திருச்சியில் கடந்த 16-ந் தேதி பெரிய சூரியூரில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து 18-ந்தேதி நவலூர் குட்டப்பட்டில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. மூன்றாவது நிகழ்ச்சியாக இன்று திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பாரில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.

முன்னதாக போட்டியை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்

ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளைகளுக்கு திருச்சி மாவட்ட கால்நடைத்துறை இணை இயக்குனர்கள் எஸ்தர் சீலா, மருதீஸ்வரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்தனர். அதேபோல் மாடுபிடி வீரர்களுக்கும் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைப்படி கொரோனா தொற்றை கண்டறியும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நெகட்டிவ் சான்றிதழ் வைத்துள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

போட்டியில் முதலாவதாக முனியாண்டவர் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை. இதையடுத்து திருச்சி, கரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

இதில் நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட ஒரு சில காளைகள் களத்தில் நின்று மாடுபிடி வீரர்களுக்கு போக்கு காட்டின. தன்னை அண்ட விடாமல் திமில்களை உயர்த்தி பார்வையை திடலின் நாலாபுறமும் செலுத்தி சுற்றி வந்து பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.

போட்டியில் கலந்து கொண்டு முதலாவதாக காளைகளை அடக்கிய 10 காளையர்களுக்கும், அடங்காத காளைகளுக்கும் தங்க காசுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பரிசாக வழங்கினார்.

மேலும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாரம்பரியமான வேஷ்டி, துண்டு, தங்க நாணயம் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

மாடுபிடி வீரர்களுக்கும், மாடு பாய்ந்து காயமடைந்தவர்களுக்கும் திருவெறும்பூர் வட்டார மருத்துவ அலுவலர் சுகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் மருத்துவ பரிசோதனை மற்றும் முதல் உதவிகளையும் செய்தனர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 5 டி.எஸ்.பி.க்கள் தலைமையில் 358 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போட்டியை காண அக்கம்பக்கத்து கிராமத்தினர் மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமானோர் கூத்தைப்பாரில் குவிந்துள்ளனர்.

Tags:    

Similar News