செய்திகள்
கொரோனா வைரஸ்

நெல்லை மாவட்டத்தில் புதிய உச்சம்- ஒரே நாளில் 826 பேருக்கு கொரோனா

Published On 2021-04-27 09:31 GMT   |   Update On 2021-04-27 09:31 GMT
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 500 ஆக இருந்து வந்த கொரோனா பாதிப்பு இன்று மிக உச்சமாக 826 ஆக உயர்ந்தது.
நெல்லை:

கொரோனா 2-ம் அலை நாடு முழுவதும் மிக தீவிரமாக பரவி வருகிறது. நெல்லை மாவட்டத்தில் இதன் தாக்கம் பரவலாக இருந்து வருகிறது.

கடந்த சில மாதங்களாக சொற்ப அளவில் ஒற்றை இலக்கத்தில் இருந்து வந்த பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக உயர தொடங்கியது.

இந்த மாத தொடக்கத்தில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த சில நாட்களாக 500 ஆக இருந்து வந்த பாதிப்பு இன்று மிக உச்சமாக 826 ஆக உயர்ந்தது.

நெல்லை, பாளை, தச்சநல்லூர், மேலப்பாளையம் ஆகிய 4 மண்டலத்திற்குட்பட்ட மாநகராட்சி பகுதிகளில் தொற்று வேகம் அதிகமாக உள்ளது.

அந்த வகையில் மாவட்டத்தில் தினசரி பாதிப்பில் 50 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் மாநகர பகுதியை சேர்ந்தவர்களாக இருந்து வருகிறார்கள்.

இன்று மாநகரில் மட்டும் 413 பேர் பாதிக்கப்பட்டனர். அம்பை, மானூர், நாங்குநேரி, பாளையங்கோட்டை, பாப்பாக்குடி, ராதாபுரம், வள்ளியூர், சேரன்மகாதேவி, களக்காடு என மாவட்டம் முழுவதும் பரவலாக தொற்று உறுதியானது.

இன்று பாதிக்கப்பட்டவர்களின் கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர், நெல்லை அரசு மருத்துவமனையில் 2 டாக்டர்கள், டீன் அலுவலக ஊழியர்கள் 2 பேரும், ராதாபுரத்தில் ஒரு டாக்டரும் பாதிக்கப்பட்டனர்.

மேலும் பாட்டப்பத்து, திசையன்விளை, கொக்கிர குளம், மானூர், ரெட்டியார் பட்டி, திருவேங்கட நாதபுரம், அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள், மானூரில் ஒரே வீட்டில் தாய், மகன், மகள் என 4 பேரும், தச்சநல்லூர் பாலபாக்யா நகரில் உள்ள ஒரு குடியிருப்பில் 25 பேருக்கு தொற்று உறுதியானது.

இதனால் அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சந்திப்பு மற்றும் சாந்திநகர் காவலர் குடியிருப்பில் பெண் உள்பட 4 போலீசாருக்கும் பாதிப்பு உறுதியானது.

பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் மொத்த பாதிப்பு 22,564 உயர்ந்துள்ளது. இதுவரை 17,854 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 4,480 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Tags:    

Similar News