வழிபாடு
நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில்... முன்னழகு மற்றும் பின்னழகு அலங்காரம்.

பெண்ணாசையை துறக்க மோகினி அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்

Published On 2021-12-13 05:50 GMT   |   Update On 2021-12-13 05:50 GMT
கொரோனா விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் சொர்க்கவாசல் திறப்பின்போது பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. அதன் பிறகு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே பரமபத வாசலை கடந்து தரிசிக்கலாம்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 3-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.

ஸ்ரீரங்கம் கோவில் மணவாள மாமுனிகளின் நியமனத்தின் படி 19 வருடங்களுக்கு ஒரு முறை இந்த வைகுண்ட ஏகாதசி (பகல் பத்து, ராப்பத்து) திருவிழாவை கார்த்திகையில் பெரிய பெருமாளின் திருவுள்ளம் அறிந்து மாற்றியமைத்து ஏற்படுத்தினார்.

அன்று முதல் 19 வருடங்களுக்கு ஒருமுறை கார்த்திகை மாதத்திலேயே வைகுண்ட ஏகாதசி திருவிழா ஸ்ரீரங்கத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கார்த்திகை மாதம் வைகுண்ட ஏகாதசி விழா வந்துள்ளது.

4-ந்தேதி முதல் தொடங்கிய பகல்பத்து உற்சவத்தின் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் பல்வேறு அலங்காரங்களில் மூலஸ்தானத்தில் இருந்து எழுந்தருளி அர்ச்சுன மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நாளை அதிகாலை 4.45 மணிக்கு நடைபெறுகிறது. இதற்காக அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு வந்து பரமபத வாசலை கடக்கிறார்.

கொரோனா விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் சொர்க்கவாசல் திறப்பின்போது பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. அதன் பிறகு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே பரமபத வாசலை கடந்து தரிசிக்கலாம்.

பகல்பத்து உற்சவத்தின் 10-ம் நாளான இன்று நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு 7 மணிக்கு அர்ச்சுன மண்டபம் வந்தடைந்தார். அங்கிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு 5.30 மணிக்கு ஆரியப்பட்டாள் வாசலுக்கு வருகிறார். திருக்கொட்டார பிரதட்சணம் வழியாக வலம் வந்து இரவு 7 மணியளவில் கருட மண்டபம் சேருகிறார். அங்கிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணியளவில் மூலஸ்தானம் சென்றடைகிறார்.

ரெங்கநாதர் தன்னை தரிசனம் செய்ய வந்த பக்தர்களை மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை ஆகியவற்றை துறக்க வேண்டும் என்றார். இதில் பெண்ணாசையை துறப்பது கஷ்டம் என்றும், நான் பூண்டிருக்கும் மோகினி வே‌ஷத்தில் மயங்கியதால் தான் அசுரர்கள் அமிர்தத்தை அடைவதை இழந்தார்கள்.

எனவே நீங்களும் பெண்ணாசையில் மயங்காமல் நாளை வைகுண்ட ஏகாதசியன்று நான் காட்டிக் கொடுக்கும் மார்க்கத்தை கண்டுரைத்து சொர்க்க வாசலை கடந்தால் வைகுண்டத்தை அடையலாம் என்றார்.

இதையொட்டி அதிகாலை முதலே ஸ்ரீரங்கம் கோவிலில் குவிந்த திரளான பக்தர்கள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாளை தரிசித்தனர். மாலை 4.30 மணிக்கு மேல் மூலவர் மற்றும் நம்பெருமாள் மோகினி அலங்காரம் சேவை கிடையாது.

நாளை ராப்பத்து நிகழ்ச்சி தொடங்குவதையொட்டி ஆயிரங்கால் மண்டபம் வண்ண திரைச்சீலைகளால் மேற்கூரை அலங்காரம் செய்யப்பட்டதோடு, மின் விளக்குகளும் பொருத்தப்பட்டு ஜொலிக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் ஊழியர்கள், பணியாளர்கள் செய்துள்ளனர்.

Tags:    

Similar News