லைஃப்ஸ்டைல்
காதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்?

காதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்?

Published On 2020-09-24 06:41 GMT   |   Update On 2020-09-24 06:41 GMT
காது இரைச்சலுக்கு பல காரணங்கள் உண்டு. அவற்றை தற்காலிக காரணங்கள், நிரந்த காரணங்கள் என்று பிரித்து வைத்துள்ளது மருத்துவம்.
காதுக்குள் இரைச்சல் ஏற்படுவதற்கான காரணம் காதிலும் இருக்கலாம். உடலின் வேறு பகுதியிலும் இருக்கலாம். சில மனநோயாளிகள்கூட காதில் இரைச்சலும் குரலும் கேட்பதாக கூறுவார்கள். காதிலுள்ள எலும்புகள், காதிலிருந்து மூளைக்கு செல்லும் நரம்பு, மூளை ஆகியவற்றில் எது பாதிக்கப்பட்டாலும் காதில் இரைச்சல் ஏற்படும். காதுக்குள் வண்டு ரீங்காரம் செய்வது போன்றோ, குக்கர் விசில் அடிப்பது போன்றோ, புயல் மாதிரி பேரிரைச்சலோ கேட்பதாக இருந்தால் அந்த நபருக்கு ‘காது இரைச்சல்’ இருப்பதாக அர்த்தம்.

இந்த இரைச்சலின் தன்மை ஆளுக்கு ஆள் வேறுபடும். ஒருவருக்கு இரைச்சல் தொடர்ச்சியாக கேட்கும். இன்னொருவருக்கு விட்டுவிட்டு கேட்கும். ஒரு சிலருக்கு இரைச்சல் தாங்கமுடியாத அளவுக்கு கடுமையாக இருக்கும். சுற்றுப்புறம் அமைதியாக இருந்தால், காதுக்குள் இரைச்சல் அதிகமாகக் கேட்கும். குறிப்பாக, இரவில் இது அதிகம் தொல்லை தரும். உறக்கம் வராது. மனக்குழப்பத்துக்கு அடிபோடும். நினைவாற்றல் குறையும். மன அழுத்தம் அதிகரிக்கும். உடல் சோர்வாக இருக்கும்.

காது இரைச்சலுக்கு பல காரணங்கள் உண்டு. அவற்றை தற்காலிக காரணங்கள், நிரந்த காரணங்கள் என்று பிரித்து வைத்துள்ளது மருத்துவம். காதுமடலை சேர்த்து சிறு துவாரமாக காதுக்குள் செல்கிற வெளிக்காதுக்குழலில், இயற்கையாக சுரக்கிற மெழுகு உருண்டு திரண்டு கட்டியாகி காதை அடைத்துக்கொண்டால் அல்லது அயல் பொருட்கள் ஏதாவது அடைத்துக்கொண்டால், காளான் தொற்று ஏற்பட்டால் காதுக்குள் இரைச்சல் கேட்கும். இவையெல்லாமே தற்காலிகமாகக் காது இரைச்சலை உண்டாக்குபவை.

காதில் உள்ள அழுக்கை அயல் பொருளை அகற்றிவிட்டால் அல்லது காளான் தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவிட்டால் காது இரைச்சலில் இருந்து விடைபெறலாம். ஜலதோஷம் பிடித்தால்கூட சில நேரங்களில் தற்காலிகமாக காது இரைச்சல் உண்டாகும். அதேநேரத்தில் சில காரணங்களால் காது இரைச்சல் நிரந்தரமாகிவிடும். முதுமை இதற்கு முக்கியக் காரணம். வயதாக வயதாக நடுக் காது எலும்புகள், காக்ளியா எனும் நத்தை எலும்பு மற்றும் காது நரம்பிழைகள் சிதைவடைவதால் காதுக்குள் இரைச்சல் தொடங்குவது வழக்கம். காதுக்கு போகும் ரத்தம் முதுமையில் குறைவதாலும் காதில் இரைச்சல் ஏற்படுவது உண்டு.

வெளிக்காதையும் நடுக்காதையும் பிரிக்கிற செவிப்பறையில் துளை விழுந்துவிட்டால், காது இரைச்சல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதுபோன்று நடுக்காதுக்குள் நீர் கோத்துக்கொண்டால், சீழ் பிடித்துவிட்டால் காது இரைச்சல் ஏற்படும். நடுக்காதில்தான் நம் உடலிலேயே மிகச் சிறிய எலும்புகளான சுத்தி, பட்டடை, அங்கவடி எலும்புகள் உள்ளன. இவற்றில் ‘எலும்பு முடக்கம்’ எனும் நோய் தாக்கும்போது, எலும்புகள் இறுகி, ஒலி அதிர்வுகள் காது நரம்புக்கு செல்வது தடைபடும். அப்போது காது மந்தமாவதோடு, இரைச்சலும் கேட்கும். அடுத்து, தொண்டையையும் காதையும் இணைக்கிற ‘காது- மூக்கு -தொண்டைக்குழாய்’ அழற்சி அடைந்து, வீங்கிக் கொண்டாலும் காது இரைச்சலுக்கு வழி அமைக்கும். காதில் அடிபட்டாலும் இந்த பிரச்சினை ஏற்படலாம்.
Tags:    

Similar News