செய்திகள்
உளுந்தம் பருப்பு

வரத்து குறைவு காரணமாக உளுந்து, துவரம் பருப்பு விலை கடும் உயர்வு

Published On 2019-11-06 03:27 GMT   |   Update On 2019-11-06 03:27 GMT
வரத்து குறைவால் உளுந்து, துவரம் பருப்பு விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
சென்னை:

சென்னையில் உள்ள மொத்த விற்பனை கடைகளுக்கு உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு உள்பட பருப்பு வகைகள் மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து சில்லரை விற்பனையாளர்கள் வாங்கி சென்று விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் உளுந்து, துவரம் பருப்பு விலை மொத்த விற்பனையாளர்கள் விலையில் கடந்த வாரத்தை விட அதிகளவில் உயர்ந்துள்ளது. கடந்த வாரத்தில் உளுந்தம் பருப்பு முதல் ரகம் ஒரு கிலோ ரூ.97 என விற்பனை செய்யப்பட்டு வந்தது.

தற்போது கடும் விலை உயர்வை சந்தித்து ஒரு கிலோ ரூ.140-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 2-வது ரக உளுந்தம் பருப்பும் கடந்த வாரத்தை விட கிலோவுக்கு ரூ.42 அதிகரித்து, ரூ.120-க்கு விற்பனையாகிறது. இதேபோல், துவரம் பருப்பு விலையும் அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் முதல்ரக துவரம் பருப்பு ரூ.97-க்கு விற்பனையான நிலையில், நேற்று ஒரு கிலோ ரூ.110-க்கும், 2-வது ரகம் ரூ.90-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல் பாசி, மைசூரு பருப்பு உள்பட பருப்பு வகைகள் அனைத்தும் கடந்த வாரத்தை விட கிலோவுக்கு ரூ.5 வரை உயர்ந்து தான் காணப்படுகிறது. பருப்பு வகைகளை போலவே, பிற மளிகை பொருட்களின் விலையும் சற்று அதிகரித்துள்ளது. பெரிய மற்றும் குண்டு மிளகாய் கடந்த வாரத்தை விட கிலோவுக்கு ரூ.15 வரையில் உயர்ந்துள்ளது. மிளகு, சீரகம், புளி ஆகியவற்றின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை.

கடந்த சில நாட்களாக பூண்டு விலையும் எகிறி வருகிறது. கடந்த ஆண்டு இதே நேரத்தில் ஒரு கிலோ பூண்டு ரூ.38-க்கு விற்பனை ஆனது. ஆனால் இந்த ஆண்டு வரத்து குறைவால் ஒரு கிலோ ரூ.220-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரத்தை விட ஏலக்காய் விலை மட்டும் சற்று குறைந்து இருக்கிறது.

பருப்பு வகைகள் விலை உயர்வு குறித்து கோயம்பேடு மார்க்கெட் வியாபாரி பி.பாண்டியராஜன் கூறியதாவது:-

மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து சென்னை மொத்த வியாபாரிகளுக்கு பருப்பு வகைகள் கொண்டு வரப்படும். தினமும் 30 லாரிகளில் சரக்கு வந்து கொண்டு இருந்த நிலையில், தற்போது வரத்து வெகுவாக குறைந்து இருக்கிறது.

அதேபோல், தேனி, விருதுநகரில் இருந்தும் 20 லாரிகளில் சரக்கு வரும். அங்கிருந்தும் வரத்து குறைந்து இருக்கிறது. இதன் காரணமாகவே உளுந்து, துவரம் பருப்பு விலை உயர்ந்துள்ளது. இனிவரும் நாட்களிலும் விலை அதிகரித்து தான் காணப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News