ஆன்மிகம்
சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவம் நடந்தபோது எடுத்தபடம்.

பிரம்மோற்சவ விழா: ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

Published On 2021-03-15 08:46 GMT   |   Update On 2021-03-15 08:46 GMT
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 9-வது நாளில் சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவமும், நடராஜர்-சிவகாமசுந்தரி திருக்கல்யாண உற்சவமும் நடந்தது.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 9-வது நாளான நேற்று அதிகாலை 3 மணியளவில் சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மணக்கோலத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் பட்டுச்சேலை அணிந்து தங்க, வைர நகைகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தார்.   

கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் உற்சவர் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் எழுந்தருளினார். அங்கு, திருமண தூதராக மணமகன், மணமகள் தரப்ைபச் சேர்ந்தவர்கள் 5 முறை பேச்சு வார்த்தை நடத்தி சிவபெருமானை திருமணம் செய்து கொள்ள பார்வதிதேவி சம்மதம் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து திருக்கல்யாண ஏற்பாடுகளாக மணமக்களின் திருமண உடைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அம்மிக்கல் வைத்தும் அருந்ததி நட்சத்திரம் பார்த்தும் திருமண ஏற்பாடுகள் நடந்த நிலையில், வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓத, அர்ச்சகர்கள் கலச பூஜை செய்தனர்.

வேத மந்திரங்கள் மற்றும் மங்கல வாத்தியங்கள் முழங்க ஹோமம் வளர்த்து ஆதி தம்பதியர்களான சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவம் நடந்த நேரத்தில் ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ.பியப்பு. மதுசூதன்ரெட்டி இலவசமாக 152 பேருக்கு தங்கத் தாலியை வழங்கினார்.

ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவத்தின்போது, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தை திருமணம் நடப்பது வழக்கம். ஆனால் தேவஸ்தன அதிகாரிகள், போலீசார், வருவாய்த்துறையினர் இணைந்து பொதுமக்களின் ஒத்துழைப்போடு கிராமங்களிலும், நகரங்களிலும் குழந்தை திருமணம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதால் தற்போது வரை ஒரு குழந்தை திருமணமும் நடக்காமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதைத்தொடர்ந்து புதுமண தம்பதியர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் தங்க யானை வாகனத்திலும், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் தங்க சிம்ம வாகனத்திலும் மணக்கோலத்தில் எழுந்தருளி கோவிலுக்கு வந்து திரும்பினர்.

அதன் பிறகு நேற்று பகல் 11 மணியளவில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் அலங்கார மண்டபத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு நெப்பல மண்டபம் வரை வந்து, பின்னர் தனித்தனி ருத்ராக்‌ஷ அம்பாரி வாகனங்களில் எழுந்தருளி அங்கிருந்து கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

அதிகாலை நடந்த திருக்கல்யாண உற்சவத்தைத் தொடர்ந்து, இரவு 8 மணியளவில் கோவில் வளாகத்தில் உள்ள கிருஷ்ண தேவராயர் மண்டபத்தில் நடராஜர்-சிவகாமசுந்தரி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதை, சபாபதி திருக்கல்யாணம் என்றும் கூறுவர்.
Tags:    

Similar News