உள்ளூர் செய்திகள்
ஆலோசனை கூட்டம்

எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கண்டனம்

Published On 2022-01-11 11:28 GMT   |   Update On 2022-01-11 11:28 GMT
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடந்தது
கோவை:

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர் களுடனான ஆலோசனை கூட்டம் அமைச்சர் செந்தில் பாலாஜி. தலைமையில் நடந்தது. பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

 கோவை மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் 7,368 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.  தனியார் ஆஸ்பத்திரிகளில் 4191 படுக்கை வசதிகள் உள்பட மொத்தம் 12, 059 படுக்கை வசதிகள் உள்ளது.  இதில் ஆக்சிஜன் படுக்கை வசதி 6800.

 கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்டம் முழுவதும் 2206 மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது கூடுதலாக 1,105 பேர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார். மொத்தம் 3,311 மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் சனிக்கிழமைகளில் வணிக மற்றும் வர்த்தக நிறுவனங்களில் பொருட்கள் வாங்க கூட்டம் அதிகமாக வருவதாக புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. 

 இது தவிர்க்கப்பட  வேண்டும்.  பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனாவை  கட்டுப்படுத்த முடியும். தேவை இல்லாமல் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். 

தேவையில்லாமல் கூட்டம் கூடுபவர்கள்மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். இது சம்பந்தமாக வணிக நிறுவன உரிமை யாளர்களுக்கு அறிவுரை வழங்கப் பட்டுள்ளது.  பூஸ்டர் டோஸ் தடுப்பூசி 70 ஆயிரத்து 950 பேருக்கு போடப்படவேண்டும். இதுவரை 1, 670 பேருக்கு போடப்பட்டுள்ளது. 

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  வழிகாட்டுதலின்படி அனைத்து பொங்கல் பரிசு பொருட்களும் தரமான முறையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.  

இது சம்பந்தமாக குற்றம்சாட்டும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவருடைய தொகுதிகளில் உள்ள எத்தனை ரேஷன்  கடைகளுக்கு சென்று ஆய்வு செய்தார்.  அப்போது அவரிடம் மக்கள் யாராவது பொங்கல் பரிசு பொருட்கள் தரம் இல்லை என புகார் சொன்னார்களா?  என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால், தி.மு.க மாவட்ட பொறுப்பாளர்கள் கார்த்திக், பையா கிருஷ்ணன், மருதமலை சேனாதிபதி, டாக்டர் வரதராஜன் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர். 

தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையத்தை ஆய்வு செய்தார். பின்னர் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் பொங்கல் பரிசு தொகுப்புகள் தரமாக உள்ளதா என பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
Tags:    

Similar News