செய்திகள்
எளியோரைக் காக்கும் எட்டுக்குடி வேலவன்

கந்தன் புகழ் பாடும் கந்தர் அலங்காரம் - எளியோரைக் காக்கும் எட்டுக்குடி வேலவன்

Published On 2021-10-23 11:22 GMT   |   Update On 2021-10-23 11:22 GMT
திருவாரூர் மாவட்டம், திருக்குவளை அருகே உள்ள எட்டுக்குடி ஆதிபடை வீடு என்று அழைக்கப்படுகிறது. மிகப் பழமையான கோவில்களில் ஒன்று.
எளியோர்க்கு யார் துணை?
எங்கும் நிறைந்த பரம்பொருளான முருகனே உற்ற வழித்துணை
“விழிக்குத் துணை திருமென் மலர்ப் பாதங்கள். மெய்மை குன்றா மொழிக்குத் துணை முருகாவெனும் நாமங்கள்.”- என்கிறார் அருணகிரியார்.
செம்மலை வண்டு கடரங்க மாவென்ற திண்படை வேற்
........செம்மலை வண்டு விருப்புறு மோவிது தேர்ந்துரையே   என்கிறார் கந்தர் அந்தாதியில்.  
சிவந்த கிரவுஞ்ச மலையையும், வண்டினங்கள் உலவுகின்ற சமுத்திரத்தின் கன் மாமரமாய் நின்ற சூரபத்மனை ஜெயித்த வேலாயுதக் கடவுளை, வளப்பமான சேவல் கொடியை உடைய குமரக் கடவுளை பாடாமல் இருந்து விடாதே.தெளிவாகவும், இனிப்பாகவும், கைக்கு அருகில் வாய்த்திருந்தும், பழைய பூவை விரும்பும் வண்டினங்கள் உண்டோ? இந்த உண் மையை நீ உணர்ந்து முருகனையே நீ புகழ்ந்து பாடுவாயாக? என்று ஒரு பாணனை நோக்கிக் கூறுவது போல் சொல்கிறார் அருணகிரியார்.

கிரவுஞ்ச மலையைப் பிளந்து அங்கு வழி ஏற்படுத்துமாறு தன் வேலாயுதத்தை ஏவி அருளிய திருமுருகப் பெருமானை வேண்டி வணங்கினால் வேண்டியதை எல்லாம் தருவான்.அவனை வணங்கிச் செய்யும் தவமானது நம் இறுதி யாத்திரையின் வழிக்குக் கட்டமுது போல் பொருத்தமான துணையாக அமையும் என்கிறார் அருணகிரியார்.

“நின்னளந் தறிதல் மன்னுயிர்க் கருமையின்
 நின்னடி யுள்ளி வந்த னென்” என்று அவனையே தொழுது நின்றால் புன்னகை பூத்த முகத்துடன் அஞ்சேல் என்று வருவான் முருகன். என்றும் இளமைத் திறன் குன்றாதவன் அவன். அவன் அழகை இரு கண்களால் பருக முடியாது.
செங்கோட்டில் வாழும் முருகன் திருமாலின் மருகன்.தில்லையில் நடனம் புரியும் சிவனாரின் மகன். ஞான வடிவான நாதன். அப்பெருமானைக் காணக் கண் ஆயிரம் இருந்தாலும் போதாது என்கிறார் அருணகிரியார்.
மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு
மேலான தேவனை மெய்ஞான தெய்வத்தை மேதினியில்
சேலார் வயர் பொழில் சென்கொட்டனைச் சென்று கண்டு தொழ
நாலா யிரங்கண் படைத்திலனே அந்த நான்முகனே.”
என்று பாடுகிறார்.

முருகனை மனதார வாழ்த்தி நம்மிடம் இழுக்கி றோம். ஆண்டவன் தன் கருணையால் தன் னிடம் இழுக்கிறான். உலகத்தில் எதையும் விரும்பாமல்,அவனை விரும்பி திருப்புகழ் பாடினால்,நமக்கு வேண்டியவற்றை அவன் அருளுவான்.
மனிதன் தன் சொந்த அறிவையும், மமதையை ஒழித்து நடப்பது, எல்லாம் முருகன் செயல் என்ற நினைவுடன் சென்றால் அவன் எப்போதும் துணை நிற்பான்.

முருகாவெனும் நாமம் எப்போதும் நமக்குத் துணையாக அமையும். அவன் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறான். அவனின் ஆகர்ஷணம் அதிகமாக உள்ள இடங்களில் அவனின் அருளாட்சி மிகவும் அதிகமாக இருக் கும். அப்படிப்பட்ட இடங்களில் ஒன்றுதான் எட்டுக்குடி.

திருவாரூர் மாவட்டம், திருக்குவளை அருகே உள்ள எட்டுக்குடி ஆதிபடை வீடு என்று அழைக்கப்படுகிறது. மிகப் பழமையான கோவில்களில் ஒன்று.

நாகப்பட்டினம் அருகே பொருள்வைத்த சேரி என்ற இடத்தில் ஒரு சிற்பி இருந்தார். அவர் தீவிர முருக பக்தர். அவர் ஒரு முருகன் சிலை ஒன்றை அற்புத அழகோடு செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சோழ மன்னன் ஒருவன் சிலையின் அழகில் மயங்கி, இனி இதுபோல் வேறு எங்கும் இந்தமாதிரி சிலையைச் செய்யக் கூடாது என்று சிற்பியின் கட்டை விரலை வெட்டி விடுகிறான்.

கட்டை விரல் இழந்த நிலையிலும் அந்தச் சிற்பி பக்கத்து ஊருக்குச் சென்று அதேபோல் ஒரு முருகன் சிலையை உருவாக்க ஆரம்பித்தார். அப்போது அங்கு முத்தரசன் என்ற குறுநில மன்னன் ஒருவன் வர முருகன் அமர்ந்திருந்த மயில் பறக்க ஆரம்பிக்கிறது. உடனே மன்னன் காவலாளிகளைப் பார்த்து அந்த மயிலை “எட்டிப் பிடி” என்கிறார்.  அதுவே மருவி எட்டுக்குடி என்று ஆனது. அவர்கள் மயிலைப் பிடிக்கும்போது, அதன் கால் சிறிது சேதம் அடைந்து விடுகிறது. மயில் அங்கேயே நின்று விட்டது.

அதன் பிறகு சிற்பி மற்றொரு முருகன் சிலை செய்தார். அதுவே இங்குள்ள முருகன் சிலை. முதலில் செய்த சிலை சிக்கல் கோவிலில் உள்ளது. இங்கு முருகன் அமர்ந்துள்ள மயிலின் ஆதாரம், தரையின் மீதுள்ள அதன் இரண்டு கால்கள் மட்டுமே.

இங்குள்ள முருகன் வள்ளி, தெய்வானை சகிதம் காட்சி அளிக்கிறார். இங்கு முருகனை குழந்தையாகப் பார்த்தால் குழந்தை, இளைஞனாகப் பார்த்தால் இளைஞன், முதியவ்ராகப் பார்த்தால் முதியவராகத் தெரிகிறான் என்கிறார்கள் பக்தர்கள்.

இங்கு முருகன் உக்கிரமாக இருப்பதால் பக்தர்கள் பாலாபிஷேகம் செய்கிறார்கள். சூரபத்மனை வதம் செய்ய முருகன் இங்கிருந்து புறப்பட்டதாக ஐதீகம். வதத்திற்கு முருகனுடன் சென்ற ஒன்பது வீரர்களின் சிலைகள் பிரகாரத் தில் உள்ளது.

சத்ரு சம்ஹாரம் செய்யவும், குழந்தை வரம் வேண்டுபவர்கள் மனை கட்டியும் பிரார்த் தனை செய்கிறார்கள். இங்கு காவடி எடுப்பது சிறப்பு. தல விருட்சமாக வன்னி மரமும், சரவணப் பொய்கை தீர்த்தமாகவும் உள்ளது. கந்த புராணத்தில் முருகன் இங்கிருந்து சூரபத்மனை வதம் செய்ய தேவேந்திரன் மயிலாக மாறி நிற்க, அதன் மேல் அமர்ந்து சென்றதாக குறிப்பிடப் படுகிறது.
அந்த தோற்றத்தில் அம்பறாத் துணியில் இருந்து அம்பை எடுக்கும், நிலையில் வீர சவுந்தர்யம் நிரம்பிய மூர்த்தமாக முருகன் வீற்றிருக்கிறான். வேண்டியதை, வேண்டி யபடி  அருள் கிறான் முருகன். இங்கு காவடி எடுத்தால் நம் துயரங்கள் அனைத்தையும் நீக்கி அருள்கிறான் முருகன். எளியவர்களின் அன்பை மட்டுமே ஏற்று ஓடி வருகிறான் கந்தன்.

“நீயே என் வாழ்வுக்கு கதியானவன். நிலையாக எனைக் காக்கும்,
துணையானவன்”- என்று கொண்டாடு கிறார் கள் பக்தர்கள்.

“குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா
கொண்டாடும் தெய் வமே முருகனல்லவா” என்ற பாடல் வரிகளால் போற்றுகிறார்கள்.

இங்கு எல்லா நாட்களும் திருவிழாக்கள்தான். முருகனுக்குரிய அனைத்து விசேஷ நாட்களும் மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. குழந்தை இல்லாதவர்கள், இங்கு முருகனை வேண்டி, விரதம் இருந்து மணி கட்டுகிறார்கள்.

இது சிவ தலமாக இருந்தாலும், முருகனே இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறான். பிருங்கி முனிவர் ஈசனை மட்டுமே சுற்றி வந்து, வணங்குவதால், மனம் வருந்திய அம்பிகை எட்டுக்குடி வந்து தவம் இருந்து ஈசனின் பாதியைப் பெற்றதாகப் புராணங்கள் கூறுகிறது.

இங்கிருந்து சூரபத்மனை வதம் செய்ய முருகன் கிளம்பிச் சென்றான்.
எட்டுக்குடி முருகனைப் பற்றி அருணகிரியார் பாடியிருக்கிறார்.
“ஓங்கு மைம்புல னோட நினைத்ததின் ........ பயர்வேனை
ஒம்பெரும் பிரனவாதி யுரைத்தெந்........ தனையாள்வாய்
........ காங்கை யாங்கறு பாசில் மனத்தன்பர்கள் வாழ்வே
காஞ்சிரங்குடி ஆறு முகத்தெம் ---பெருமாளே என்று பாடுகிறார் அருணகிரியார்.

ஐம்புலன்களும் எனை எனை இழுத் தோட,அதன்பின் சென்று நான் தளர்ச்சி அடையும்வேளை, ஓம் எனும் பிரணவ மந்திரங் களை எனக்கு உபதேசித்து அருள்வாயாக. காஞ்சிரங்குடி என்ற எட்டுக்குடி தலத்தில் ஆறுமுகத்தோடு வாழும் பெருமானே, நீயே என் பந்த பாசங்களை நீக்கி ஆட்கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறார்.

இங்குள்ள சிலையில் இன்றும் ரத்த ஓட்டம் இருப்பதாகப் பக்தர்கள் வியப்புடன் கூறுகிறார்கள். எங்கு இருந்தாலும் முருகன் உயிரோட்டத்துடன் காணுவான். அவனை நம்பும் பக்தர்களுடன் அவன் பேசுகிறான். துணையாக நிற்கிறான். வழி காட்டுகிறான்.

கல்கண்டு நீரில் கரைவது போல் முருகன் எனும் நாமத்தில் நம் அறிவையும், மனதையும் கரைத்து விட்டு அதிலேயே மூழ்கி விட வேண்டும். அவனின் அன்பு கல்கண்டை விட இனிப்பானது.

ஐம்பத்தொரு அக்ஷரங் களால் ஆனது திருப் புகழ். உலக வாழ்வின் இன்ப, துன்பங்களில் உழலும் மனிதனை அவனது துன்பத்தில் இருந்து காப்பாற்றுவது திருப்புகழ். ஆண்டவனை நினைத்து, அவன் அருள் வேண்டி வணங்குவதே ஆசையற்று இருக்க வழி.
எல்லாவற்றிலும் முருகனைக் காண வேண் டும். தலையில் சிறந்தது முருகனை வணங்கும் தலையே என்கிறார்கள்.

உன்னையொழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னையோருவரை யான் பின் செல்லேன்.”- என்கிறார் நக்கீரர்.
ஆமாம் முருகனை நம்பி, அவன் பின்னால் சென்றால் போதும், எளியோரைக் காத்து, அருள் செய்வான் எட்டுக்குடி வேலவன்.

Tags:    

Similar News