செய்திகள்
ஜெக்தீப் தங்கர்

மேற்கு வங்காளத்தில் சட்டம்-ஒழுங்கு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது: கவர்னர் குற்றச்சாட்டு

Published On 2021-06-07 02:23 GMT   |   Update On 2021-06-07 02:23 GMT
காழ்ப்புணர்ச்சி மற்றும் ரவுடியிசம் ஆகியவற்றின் விளைவாக பெரிய அளவில் தீ வைப்பு, கொள்ளை மற்றும் சொத்துக்கள் சூறையாடல் போன்றவை அரங்கேறி வருகின்றன. சட்டத்திற்கு பயப்படாத முரட்டுத்தனமான குண்டர்களால் கற்பழிப்பு மற்றும் கொலைகள் என பல நிகழ்வுகள் நிகழ்ந்து வருகின்றன.
கொல்கத்தா :

மேற்கு வங்காளத்தில் கடந்த மாதம் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா தொண்டர்கள் இடையிலான மோதல் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. இதில் ஏராளமானோர் உயிரிழந்தும், வீடுகள் உள்ளிட்ட சொத்துகள் சூறையாடப்பட்டும் வருகின்றன.

இந்த வன்முறை தொடர்பாக மத்திய அரசு ஏற்கனவே கண்டனம் தெரிவித்து இருந்தது. மேலும் இது தொடர்பான வழக்குகள் மாநில ஐகோர்ட்டில் விசாரிக்கப்பட்டும் வருகின்றன.

எனினும் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலவரம் தொடர்ந்து மோசமாகவே நீடித்து வருவதாக கவர்னர்
ஜெக்தீப் தங்கர்
குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறியிருப்பதாவது:-

மேற்கு வங்காளத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தேர்தலுக்கு பிந்தைய பழிவாங்கும் வன்முறைகள், கற்பனைக்கு எட்டாத அளவில் உள்ளன. இதில் நூற்றுக்கணக்கான கோடி மதிப்புள்ள சொத்துக்கள் அழிக்கப்பட்டு உள்ளன, லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து உள்ளனர்.

காழ்ப்புணர்ச்சி மற்றும் ரவுடியிசம் ஆகியவற்றின் விளைவாக பெரிய அளவில் தீ வைப்பு, கொள்ளை மற்றும் சொத்துக்கள் சூறையாடல் போன்றவை அரங்கேறி வருகின்றன. சட்டத்திற்கு பயப்படாத முரட்டுத்தனமான குண்டர்களால் கற்பழிப்பு மற்றும் கொலைகள் என பல நிகழ்வுகள் நிகழ்ந்து வருகின்றன.

ஆளும் கட்சியினரால் ஜனநாயக மதிப்பீடுகள் வெளிப்படையாக துண்டிக்கப்பட்டு மிதிக்கப்படுகின்றன. போலீசாரையும், ஆளும் கட்சியினரையும் பார்த்து மக்கள் மரண பயத்தில் உள்ளனர்.

திரிணாமுல் காங்கிரசுக்கு வாக்களிக்காதவர்கள், அரசியல் எதிரிகளை பழிவாங்குவதை அனுமதிக்கும் விதத்தில் ஆளும் கட்சியினரின் விரிவாக்கமாகவே போலீசார் செயல்படுகின்றனர்.

மிகவும் ஆபத்தான சட்டம்-ஒழுங்கு காட்சிகள் அரங்கேறுகின்றன. பாதுகாப்பு சூழல் தீவிரமாக சமரசம் செய்யப்படுகிறது.

இதுபோன்ற ஒரு மோசமான சூழ்நிலையில், சட்டம், ஒழுங்கு குறித்து விளக்கம் கேட்பதற்காக தலைமை செயலாளரை 7-ந்தேதி (இன்று) அழைத்திருக்கிறேன். அப்போது வாக்கெடுப்புக்குப் பிந்தைய வன்முறைகளை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்கப்படும்.

இவ்வாறு கவர்னர் ஜெக்தீப் தங்கர் குறிப்பிட்டு உள்ளார்.
Tags:    

Similar News