செய்திகள்
ஈராக் நாட்டில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள்

ஈராக்: அரசுக்கு எதிரான போராட்டத்தில் மீண்டும் 18 பேர் பலி

Published On 2019-10-29 11:50 GMT   |   Update On 2019-10-29 11:50 GMT
ஈராக் நாட்டில் அரசுத்துறைகளில் பெருகிவரும் ஊழல் மற்றும் வேலை இல்லா திண்டாட்டம் ஆகியவற்றை எதிர்த்து நடைபெற்றுவரும் போராட்டத்தில் நேற்று மட்டும் 18 பேர் உயிரிழந்தனர்.
பாக்தாத்: 

ஈராக் நாடு தொடர் போர்களால் நிலை குலைந்துள்ளது. அங்கு வாழ்வாதாரம் இன்றி மக்கள் தத்தளிக்கின்றனர். இந்த நிலையில் வேலை  வாய்ப்பு வழங்க வேண்டும், ஊழலை ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வீதிகளில் இறங்கி மக்கள் போராட்டம் நடத்தி  வருகின்றனர். 

தலைநகர் பாக்தாத் உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இதுவரை போராட்டத்தில் ஈடுப்பட்ட 150க்கும்  மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 4,000 மக்கள் காயமடைந்துள்ளனர். 

இந்நிலையில், நேற்று இரவு கர்பாலா நகரில் நடைபெற்ற போராட்டத்தில் 18 பேர் கொல்லப்பட்டனர்.  

இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், கர்பாலாவில் உள்ள இமாம் ஹுசைன் மசூதி அருகே போராட்டக்காரர்கள் முகாமிட்டு  இருந்தனர். கலைந்து செல்லுமாறு அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.  



ஆனால், அவர்கள் செல்ல மறுத்ததால் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 18 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர்  காயமடைந்தனர், என கூறினர். 

ஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் பொதுமக்கள் பலியானது துன்பகரமானது. இது நிச்சயம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என  ஐ.நா சபை முன்னர் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News