செய்திகள்
நாகர்கோவில் அருகே உள்ள தேரூர் பெரியகுளம் நிரம்பி தண்ணீர் வெளியேறும் காட்சி

குமரி மாவட்டத்தில் கனமழை நீடிப்பு - 100 குளங்கள் உடையும் அபாயம்

Published On 2019-08-10 05:12 GMT   |   Update On 2019-08-10 05:12 GMT
குமரி மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. தொடர்ந்து அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் நூற்றுக்கும் மேற்பட்ட குளங்கள் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நாகர்கோவில்:

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளதால் அதனையொட்டி உள்ள குமரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக மழை பெய்து வருகிறது.

நேற்று மாவட்டம் முழுவதும் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இரவும் விடிய, விடிய மழை பெய்தது. இன்று காலையிலும் தொடர்ந்து கனமழை நீடித்து வருகிறது. அதிகபட்சமாக சிற்றாறு-1ல் 66.6 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

நாகர்கோவிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை காலை 9 மணி வரை இடைவிடாது பெய்தது. இதனால் கோட்டார் சாலை, மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலை, செம்மாங்குடி ரோடுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பள்ளி சென்ற மாணவ, மாணவிகள் குடைபிடித்தவாறு சென்றனர்.

மார்த்தாண்டம், குலசேகரம், களியக்காவிளை, கன்னியாகுமரி, குளச்சல், தக்கலை, இரணியல் பகுதிகளிலும் இன்று காலையில் கனமழை கொட்டியது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களிலும் சூறை காற்றுடன் மழை பெய்து வருகிறது.

கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வள்ளியாறு, பரளியாறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. குழித்துறை ஆற்றில் சப்பாத்து பாலத்தை மூழ்கடித்து இன்று 3-வது நாளாக வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது.

கீரிப்பாறை, மோதிரமலை, குற்றியாறு பகுதிகளிலும் மழை நீடித்து வருவதால் மலையோர பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். குற்றியாறு தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் தோட்ட தொழிலாளர்கள் பரிதவிப்பிற்கு ஆளாகி உள்ளனர். தோவாளை சானல், பழையாறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் பாசன குளங்கள் நிரம்பி வருகின்றன. மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. தொடர்ந்து அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் நூற்றுக்கும் மேற்பட்ட குளங்கள் உடையும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. தேரூர் பெரியகுளம் நிரம்பி வழிவதால் குளத்தில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

சாமிதோப்பு, பால்குளம், கோவளம் பகுதிகளில் உள்ள உப்பளங்களில் மழை நீர் தேங்கி உள்ளதால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. தோவாளை பகுதியில் செங்கல் உற்பத்தியும் பாதிக்கப்பட்டு உள்ளதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இன்றி தவித்து வருகிறார்கள்.



நாகர்கோவில் கோணம் கம்பி பாலத்தின் அருகே இன்று அதிகாலை தென்னை மரம் ஒன்று ரோட்டில் முறிந்து விழுந்தது. இதில் அந்த பகுதியில் இருந்து மின்கம்பங்களும் உடைந்து விழுந்தன. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினார்கள்.

இரணியல், திங்கள்நகர், தலக்குளம், மேக்காமண்டபம், கண்டன்விளை பகுதிகளிலும் சூறைக்காற்றிக்கு மரங்கள் முறிந்து விழுந்தன. குலசேகரம், களியல் பகுதியில் நூற்றுக்கணக்கான ரப்பர் மரங்களும் முறிந்தது.

மழையினால் குமரி மாவட்டத்தில் 10 வீடுகள் சேதமடைந்து உள்ளது. அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 3 வீடுகளும், விளவங்கோடு தாலுகாவில் 2 வீடுகளும், கிள்ளியூர் தாலுகாவில் 4 வீடுகளும், கல்குளம் தாலுகாவில் ஒரு வீடும் சேதமடைந்து உள்ளது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும் பெய்துவரும் மழையின் காரணமாக அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 2 அடியும், பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 3¼ அடியும் உயர்ந்துள்ளது.

கேரளாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக நாகர்கோவில் வரும் பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. குருவாயூர் எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News