ஆன்மிகம்
திருநள்ளாறு சனிபகவான் கோவில் அருகே உள்ள ஆன்லைன் முன்பதிவு மையம்.

சனிப்பெயர்ச்சி: சனிபகவான் கோவிலைச் சுற்றி 7 இடங்களில் ஆன்லைன் பதிவு மையம்

Published On 2020-12-23 09:08 GMT   |   Update On 2020-12-23 09:08 GMT
சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக திருநள்ளாறு சனிபகவான் கோவிலை சுற்றி 7 இடங்களில் ஆன்லைன் பதிவு மையம் தொடங்கப்பட்டுள்ளது.
காரைக்கால் :

உலக பிரசித்திபெற்ற திருநள்ளாறுசனிபகவான் கோவிலில் இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை வாக்கியப் பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம். இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

இந்த ஆண்டு வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.22 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. அப்போது, சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்கிறார். இந்த ஆண்டு கொரோனா காலம் என்பதால், பக்தர்களின் நலன் கருதி, கோவில் நிர்வாகம், ஆன்லைன் முன் பதிவை கட்டாயமாக்கியுள்ளது.

விழாவிற்கு ஒரு சில நாட்களே உள்ள நிலையில், கோவில் உள்ளே, வெளியே பக்தர்களின் நலன் கருதி, சாலை, சாக்கடை, மின்விளக்குகள் சீரமைப்பு, கைகழுவும் சானிடைசர், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், அன்னதானம் வழங்கல், நிழல் பந்தல், நிரந்தர மற்றும் தற்காலிக கழிவறை வசதிகள், கோவிலைச்சுற்றி 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சி.சி. டி.வி. கேமரா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மேலும், வரும் 26, 27-ந் தேதி மற்றும் அடுத்த (ஜனவரி) மாதம் இறுதிவரை ஒவ்வொரு சனி, ஞாயிற்றுக்கிழமையும், சனிபகவான் தரிசனத்திற்கு, தேவஸ்தானம் மூலம் ஏற்பாடு செய்துள்ள ஆன்லைன் முன்பதிவு அவசியம். (ஆன்லைன் முகவரி- www.thirunallarutemple.org) முன் பதிவு செய்யாத யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதேபோல், முககவசம், சமூக இடைவெளி மிக அவசியம்.

சனிப்பெயர்ச்சி நாள் மட்டுமல்லாது அன்றைய தேதியிலிருந்து, ஒரு மண்டலத்துக்கு (அடுத்த 48 நாட்கள்) இக்கோவிலில் சனி பகவானை தரிசனம் செய்யலாம். அந்த தரிசனம் சனிப்பெயர்ச்சி அன்று கிடைக்கும் பலனை பெற்றுத்தரும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி, தேவஸ்தான ஆன்லைனில் முன்பதிவு செய்யாமல், திருநள்ளாறுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி, கோவிலைச் சுற்றி, திருநள்ளாறு ரிங் ரோடு ஹெலிபேட் தளம், திருநள்ளாறு கான்பெட் பெட்ரோல் நிலையம், ரிஜிஸ்டர் அலுவலகம் மற்றும் செருமாவிளங்கை பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரி, கோட்டுசேரி அரசு பாலிடெக்னிக் கல்லூரி, திருமலைராயன்பட்டினம் மின்திறல் குழுமம், அம்பகரத்தூர் அரசு திருவள்ளுவர் பள்ளி அருகில் என 7 இடங்களில் ஆன்லைன் முன்பதிவு மையம் திறக்கப்பட்டுள்ளது.

இங்கு முன்பதிவு செய்ய ஆதார்கார்டு அவசியம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

முக்கியமாக, சனிப்பெயர்ச்சி அன்றும் அதற்கு அடுத்து வரும் 48 நாட்களும், சனி பகவானின் நளன் குளத்தில் புனித நீராடவோ, மத சடங்குகள் செய்யவோ அனுமதி இல்லை. அதனால், நளன்குளம் பக்கம் பக்தர்கள் செல்ல வேண்டாம். சனிப்பெயர்ச்சி அன்று பக்தர்கள் தரிசனம் செய்ய மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் எதுவும் செய்யப்பட மாட்டாது.

விழா ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் அர்ஜூன்சர்மா, கோவில் நிர்வாக அதிகாரி ஆதர்ஷ், கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சாமிகள் தலைமையில், கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News