செய்திகள்
கோப்புப்படம்

5 மாத கர்ப்பிணி உள்பட 7 பேர் கொரோனாவுக்கு பலி

Published On 2021-05-15 17:59 GMT   |   Update On 2021-05-15 17:59 GMT
வந்தவாசி, போளூர், ஆரணியில் 5 மாத கர்ப்பிணி உள்பட 7 பேர் கொரோனாவுக்கு பரிதாபமாக இறந்தனர்.
வந்தவாசி:

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கடைசிகுளம் கிராமத்தில் 5 மாத கர்ப்பிணி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டார். மேலும் அவருக்கு கொரோனா தொற்றின் அறிகுறிகள் இருந்தன. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மேல்மருத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ெதாற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார்.

கொரோனாவுக்கு கர்ப்பிணி பலியானதை அறிந்த கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவின்பேரில் கடைசிகுளம் கிராமத்தில் தூய்மை பணி நடந்தது. அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

வழூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் மணிமேகலை, ஆனந்தன் தலைமையிலான மருத்துவ குழுவினர் கடைசிகுளம் கிராமத்துக்கு வந்து கொரோனா பரிசோதனை முகாமை நடத்தினர். இந்த முகாமில் கிராம மக்களுக்கு சளி மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டது.

மேலும் டாக்டர் மணிமேகலை கிராம மக்களுக்கு கொரோனா பரவலை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கொரோனாவுக்கு கர்ப்பிணி இறந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதே போல போளூர் பேரூராட்சியில் கொரோனா பாதிப்பால் கணபதி தெருவை சேர்ந்த ராமலிங்கம், இந்திரா நகரை சேர்ந்த புருஷோத்தமன், கன்னிகா பரமேஸ்வரி தெருவை சேர்ந்த மேகலா ஆகிய 3 பேர் நேற்று உயிரிழந்தனர்.

போளூர் பேரூராட்சி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த 2 நாட்களில் 122 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களை திருவண்ணாமலை, சேத்துப்பட்டு ஆகிய இடங்களில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களுக்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுந்தர் அனுப்பி வைத்தார்.

போளூர் அரசு ஆஸ்பத்திரியில் 50 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை வார்டு அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் ஆக்சிஜன் படுக்கை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆரணி பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் ஏ.தஸ்தகீர் (வயது 65), வக்கீல் சங்க முன்னாள் தலைவர். இவருக்கு சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு திருவண்ணாமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இவரது சொந்த ஊரான வந்தவாசியில் உள்ள மயானத்தில் அரசின் வழிகாட்டுதலின்படி அடக்கம் செய்யப்பட்டது.

இதேபோல ஆரணி தாலுகா அலுவலகத்தில் தற்காலிக இளநிலை உதவியாளராக சந்தவாசல் அருகே கேசவபுரத்தைச் சேர்ந்த நாராயணசாமி (50) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த 29-ந் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்தார். நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். மேலும் ஆரணி அருணகிரி சத்திரம் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணவேணி (75) என்பவர் கொரோனாவுக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி (80) கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் பரிதாபமாக இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News