செய்திகள்
நாகையில் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் நடந்தபோது எடுத்த படம்

கஜா புயலில் பாதிக்கப்பட்ட சவுக்கு மரங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் - மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

Published On 2021-01-09 15:30 GMT   |   Update On 2021-01-09 15:30 GMT
கஜா புயலில் பாதிக்கப்பட்ட சவுக்கு மரங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நாகப்பட்டினம்:

நாகையில் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைவர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அஜிதா, மாவட்ட ஊராட்சி செயலாளர் கோவிந்தராஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

சோழன் கஜா புயலின் போது பல கோடி ரூபாய் மதிப்பிலான சவுக்கு மரங்கள் மற்றும் பணப் பயிர்கள் பாதிக்கப்பட்டன. இவ்வாறு பாதிக்கப்பட்ட சவுக்கு மரங்கள் மற்றும் பணப்பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு கணக்கெடுப்பு நடந்தது. ஆனால் இதுநாள் வரை நிவாரணம் வந்து சேரவில்லை. எனவே பாதிக்கப்பட்ட சவுக்கு மரங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

கணேசன்:- பழைய கல்லார், பரவை ஆகிய 2 இடங்களில் அமைந்துள்ள சந்தை பகுதியில் சோலார் வசதி கொண்ட உயர் கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும்.

சரபோஜி:- நாகை-தேமங்கலம் இடையே சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே இந்த சாலையை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உமாமகேஸ்வரி (தலைவர்):- உறுப்பினர்கள் பதவி ஏற்று ஒரு ஆண்டு காலம் நிறைவு பெற்று விட்டது. நாகையில் இருந்து மங்கநல்லூர் செல்லும் சாலையில் பள்ளிகள், கோவில்கள் உள்ளன. முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று நெடுஞ்சாலை துறையிடம் தெரிவித்து ஒரு ஆண்டு ஆகிவிட்டது. ஆனால் இன்னும் வேகத்தடை அமைக்கவில்லை. விலையில்லா கால்நடைகள் வழங்கும் திட்டத்திற்கு முறையாக பயனாளிகளை தேர்வு செய்து வழங்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது. கூட்டத்தில், அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News