செய்திகள்
கொலை

அவினாசியில் பால் வேன் டிரைவர் குத்திக்கொலை

Published On 2019-10-08 04:59 GMT   |   Update On 2019-10-08 05:23 GMT
அவினாசி அருகே ஆயுதபூஜையில் வண்டியை சுத்தம் செய்வதில் ஏற்பட்ட தகராறில் பால் வேன் டிரைவர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவினாசி:

மதுரை மேலூரை சேர்ந்தவர்பொறுமை ராஜன் (வயது 42). இவரது மனைவி பரமேஸ்வரி (35). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். பொறுமை ராஜன் அவினாசி வேட்டுவபாளையத்தில் குடும்பத்துடன் தங்கி அங்குள்ள தனியார் பால் கம்பெனியின் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்த மணிகண்டன், (40). இவரும் அதே பகுதியில் குடும்பத்துடன் தங்கி அதே பால் கம்பெனியில் வேன் டிரைவராக உள்ளார். பொறுமை ராஜனுக்கும், மணிகண்டனுக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.

இந்நிலையில் நேற்று ஆயுதபூஜைக்காக இருவரும் தாங்கள் ஓட்டும் வேனை சுத்தம் செய்தனர். அப்போது வேனை கழுவுவதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி கைகலப்பானது.

இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் அருகில் கிடந்த கத்தியை எடுத்து பொறுமை ராஜனின் நெஞ்சில் குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த பொறுமை ராஜன் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பொறுமை ராஜன் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளி மணிகண்டன் தலைமறைவாகி விட்டார். போலீசார்அவரை வலை வீசி தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News