செய்திகள்
ராஜினாமா செய்த உறுப்பினர்கள்

ஹாங்காங்: ஜனநாயக ஆதரவு சட்டசபை உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா

Published On 2020-11-12 01:09 GMT   |   Update On 2020-11-12 01:09 GMT
ஹாங்காங் சட்டசபையில் இருந்து ஜனநாயக ஆதரவு உறுப்பினர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.
ஹாங்காங்:

சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டம் ஹாங்காங்கில் அமல்படுத்தப்பட்டதில் இருந்தே ஜனநாயகத்திற்கு ஆதரவான அரசியல் கட்சியினர் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். 

மேலும், பல்வேறு சமூக ஆர்வலர்களும், சுதந்திரத்திற்கான ஆதரவாளர்களும் சீன அரசால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். மக்கள் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஹாங்காங்கின் சட்டசபை உள்விவகாரங்களிலும் சீனா நேரடியாக தலையிடும் நிலை ஏற்பட்டுள்ளது.  

ஹாங்காங் சட்டசபை மொத்தம் 70 உறுப்பினர்களை கொண்டது. அதில் 35 பேர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவர். 30 பேர் ஹாங்காங்கை சேர்ந்த வணிகர்கள், வங்கி அமைப்பு போன்றவர்களை கொண்ட குழுக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்கள் சீனாவின் ஆதரவாளர்களாகவே இருப்பார்கள். எஞ்சிய 5 பேர் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட கவுன்சிலர்களாக இருப்பர்.

இதற்கிடையில், தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் வகையில் ஹாங்காங் சுதந்திரதிற்கு ஆதரவாக செயல்படும் சட்டசபை உறுப்பினர்களை நீதிமன்றத்திற்கு செல்லாமல் அவர்களது பதவியில் இருந்து நீக்க ஹாங்காங் அரசாங்கத்திற்கு உரிமை வழங்கும் வகையிலான சட்டம் சீன நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட உடன் ஹாங்காங் சுதந்திரத்திற்கு ஆதரவாக சட்டசபை உறுப்பினர்கள் 4 பேரை ஹாங்காங் அரசாங்கம் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியது. இந்த சம்பவம் ஹாங்காங் ஜனநாயக ஆதரவு உறுப்பினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், 4 சட்டசபை உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்ததை கண்டித்து ஜனநாயக ஆதரவு சட்டசபை உறுப்பினர்களான எதிர்க்கட்சியினர் 15 பேரும் தங்கள் பதவியை நேற்று ராஜினாமா செய்தனர். இந்த ராஜினாமா ஹாங்காங்கில் மக்கள் போராட்டத்திற்கு வழிவகுக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
Tags:    

Similar News