உள்ளூர் செய்திகள்
குமரலிங்கம் பகுதியில் வெல்லம் தயாரிக்கும் பணி நடைபெறுவதை படத்தில் காணலாம்.

வெல்லம் விற்பனை மண்டி - கரும்பு விவசாயிகள் கோரிக்கை

Published On 2022-01-11 07:39 GMT   |   Update On 2022-01-11 07:39 GMT
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெல்லம் தயாரிப்பு மும்மரமாக நடந்து வருகிறது.
மடத்துக்குளம்:

உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் சாமராய்ப்பட்டி, கொழுமம், பெருமாள்புதூர், பாப்பான்குளம், குமரலிங்கம், வேடபட்டி, கல்லாபுரம் ஆகிய இடங்களில் கரும்பு பயிரிடும் விவசாயிகள் சொந்தமாக வெல்லம் தயாரித்து விற்பனை செய்கின்றனர்.

தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெல்லம் தயாரிப்பு மும்மரமாக நடந்து வருகிறது. இருப்பினும் உரிய விலை கிடைக்காததால் வேதனை அடைந்துள்ளனர். 

இதுகுறித்து கரும்பு விவசாயிகள் கூறியதாவது:

கடந்த ஆண்டு 30 கிலோ கொண்ட வெல்லம் சிப்பம் ரூ.1350 க்கு விற்பனையானது. ஆனால் இந்த ஆண்டு ரூ.1100க்கு தான் விற்பனையாகிறது. வெல்லம் விற்பனை செய்வதற்கு இப்பகுதியில் தேவையான கட்டமைப்பு இல்லை. தயாரித்த வெள்ளத்தை திண்டுக்கல் மாவட்டம் நெய்க்காரப்பட்டி மண்டி அல்லது பொள்ளாச்சி மண்டியில் தான் விற்க வேண்டி உள்ளது.

இடைத்தரகர்கள் மூலம் தான் விற்பனை செய்கிறோம். நேரடியாக நாங்களே விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை அரசு செய்துதந்தால் வசதியாக இருக்கும்.

முன்பு 250 வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் இருந்தன. தற்போது 80 முதல் 90 ஆலைகள் தான் உள்ளன. நிலையான விற்பனை விலை இல்லாததால் தான் பல ஆலைகள் மூடப்பட்டுவிட்டன.

வெல்லத்தை நேரடியாக விவசாயிகளே சந்தைப்படுத்தும் வகையில் மடத்துக்குளத்தில் வெல்லமண்டி ஏற்படுத்தித் தந்தால் எங்களுக்கு லாபம் கிடைக்கும்.

பொள்ளாச்சி, நெய்க்காரப்பட்டியில் வெல்லம் வாங்கும் கேரள வியாபாரிகள், பிரான்ட் பெயர் வைத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். தமிழகத்திலேயே ஏற்றுமதி செய்வதற்கான வசதிகளை தமிழக அரசு செய்து தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்.
Tags:    

Similar News